புனே கார் விபத்தில், பிணையில் விடுதலை செய்யப்பட்ட சிறுவன், ஏன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார் என்று மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதி டாங்ரே மற்றம் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு, புனே கார் விபத்து துரதிருஷ்டவசமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் தெரிவித்துள்ளது.
புணே கார் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், அதனால் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள், அதுபோல, விபத்தை ஏற்படுத்திய சிறுவனும் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பார் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், சிறார் குற்றவாளிக்கு பிணை கிடைத்தும் கூட, அதனை மறுத்து, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துவைக்கப்பட்டுள்ளது ஏன்? என்றும் காவல்துறையினருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
கடந்த வாரம், சிறாரின் உறவினர் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில், விபத்தை ஏற்படுத்திய சிறார், சட்டத்துக்கு விரோதமாக அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சிறாரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய காவல்துறை நீதிமன்ற அனுமதியை பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது. அதற்கு மாறாக, ஜாமீன் மனுவில் திருத்தம் கோரி மனு தாக்கல் செய்து, அந்த திருத்தத்தின் அடிப்படையில், சிறார் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த மே 19-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புணேயில், 18 வயதுக்குள்பட்ட சிறுவன் மிக வேகமாக ஓட்டிச் சென்ற காா் மோதி தகவல் தொழில்நுட்பப் பணியாளா்கள் இருவா் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டாா்.
அவருக்கு பிணை வழங்க விதிக்கப்பட்ட நிபந்தனைகள் கடும் விமரிசனத்துக்கு உள்ளான நிலையில், காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைத்திருந்தனர்.
பிளஸ்2 தேர்ச்சி பெற்றதற்காக, நண்பர்களுக்கு மது விருந்தளித்துவிட்டு, மதுபோதையில், குறுகிய சாலையில், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த சிறுவன் காரை இயக்கியிருக்கிறார் என்கிறது முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. குற்றவாளி சிறுவன் என்பதால், சட்டப்பிரிவு 75 மற்றும் 77ன்படி, குழந்தைகளை கவனக்குறைவாக விடுதல் மற்றும் குழந்தைகளுக்கு போதை அல்லது மதுப் பழக்கம் ஏற்பட அனுமதிப்பது போன்ற பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவனின் தந்தை அகர்வால் கைது செய்யப்பட்டார்.
சிறுவனுக்கு வழங்கப்பட்ட பிணையும் ரத்து செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டார். மருத்துவமனையில் ரத்த மாதிரியை மாற்றிய குற்றத்துக்காக சிறுவனின் தாயும், விபத்தை தான் ஏற்படுத்தியதாக, ஓட்டுநரை வலியுறுத்திய சிறுவனின் தாத்தாவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.