மகாராஷ்டிரத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான(ஓபிசி) இடஒதுக்கீடு விவகாரம் அம்மாநிலத்தில் பூதாகரப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அங்கு இடஒதுக்கீடு விவகாரம் மராத்தா பிரிவினருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு மராத்தா சமூகப் பிரிவைச் சார்ந்தோர், தங்களையும் ஓபிசி பிரிவில் இணைக்க அரசை வலியுறுத்தி வரும் நிலையில், இதற்கு ஓபிசி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரத்தின் பீட் பகுதியில் இன்று(ஜூன் 22) இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தோர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகமதுநகர் நெடுஞ்சாலையின் நடுவே அமர்ந்த போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலையில் டயர்களை தீ வைத்துக் கொளுத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதன் காரணமாக, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டோரை கைது செய்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே, கடந்த 13-ஆம் தேதியிலிருந்து இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த செயல்பாட்டாளர் லக்ஷ்மண் ஹேக் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், மாநில அரசு தரப்பில் இன்று(ஜூன் 22) அளிக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடர்ந்து, போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சாதிச் சண்டை, கலவரம் ஏற்படாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்யுமென அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று(ஜூன் 22) தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.