தர்மேந்திர பிரதான் பதவியேற்பு! மக்களவையில் ஒலித்த நீட் எதிர்ப்பு கோஷங்கள்!
எம்பியாக தர்மேந்திர பிரதான் பதவியேற்ற போது எதிர்க்கட்சிகள் கோஷம்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்பியாக பதவியேற்க வந்தபோது, எதிர்க்கட்சி எம்பிக்கள் நீட் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்க மேடை ஏறிய போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக குரல் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்பியாக பதவியேற்றுக் கொண்டார்.
இளநிலை நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தேசிய தேர்வு முகமை இயக்குநர் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கிய நிலையில், கல்வி அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே, யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக 9 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.