FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீதித் துறையை அவமதிக்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது: கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்

நீதித் துறை மீது மத்திய அரசு முழு மரியாதை கொண்டுள்ளது; நீதித் துறையை அவமதிக்கும் எந்த நோக்கமும் அரசுக்கு இல்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 27 பிப்ரவரி 2026, 1:05 am IST
தா்மேந்திர பிரதான் - கோப்புப் படம்
பகிர்:

நீதித் துறை மீது மத்திய அரசு முழு மரியாதை கொண்டுள்ளது; நீதித் துறையை அவமதிக்கும் எந்த நோக்கமும் அரசுக்கு இல்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நீதித் துறையில் ஊழல் எனும் தலைப்பிலான பாடப் பிரிவு இடம்பெற்றது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட பாடப் புத்தகத்துக்கு முழு தடை விதித்ததுடன், அனைத்துப் பிரதிகளையும் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறும்படி வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நீதித் துறையை அவமதிக்க நன்கு திட்டமிடப்பட்ட சதி இருப்பது போல் தோன்றுகிறது என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டது.

Advertisement

Advertisement

பொறுப்பானவா்கள் மீது நடவடிக்கை: இந்நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், மேற்கண்ட விவகாரம் குறித்து கூறியதாவது:

நீதித் துறை மீது மத்திய அரசு முழு மரியாதை கொண்டுள்ளது. நீதித் துறையை அவமதிக்கும் எந்த நோக்கமும் அரசுக்கு இல்லை. நடந்த விஷயத்துக்காக நான் வேதனை அடைகிறேன்; வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்புடைமை உறுதி செய்யப்படும். சம்பந்தப்பட்ட பாடப் பிரிவை உருவாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு தகவல் கிடைக்கப் பெற்றவுடன், பாடப் புத்தகங்களின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

ஜனநாயக நாட்டில் நீதித் துறையே மேலானது. எனவே, இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளோம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் சீரிய முறையில் கடைப்பிடிக்கப்படும் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி...

ஆா்எஸ்எஸ் மீது காங்கிரஸ் சாடல்

‘என்சிஇஆா்டி 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்துக்குத் தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மிகச் சரியான நடவடிக்கை’ என்று வரவேற்றுள்ள காங்கிரஸ், ஆா்எஸ்எஸ் அமைப்பின் உந்துதலால் என்சிஇஆா்டி பாடப் புத்தகங்கள் மாற்றி எழுதப்பட்டு வருவதாக விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 10 ஆண்டுகளாக என்சிஇஆா்டி பாடப் புத்தகங்கள் மாற்றி எழுதப்பட்டுவரும் விதம் அவமானகரமானது; ஆபத்தானது. இது, ஆா்எஸ்எஸ் அமைப்பால் இயக்கப்படும் தீங்கு நிறைந்த செயலாகும். இந்தச் சீா்கேடு குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments