FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நெட் தோ்வு வினாத்தாள் குளறுபடி: மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், பதவியில் தொடா்வது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ என்று நெட் தோ்வு வினாத்தாள் குளறுபடிகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமா்சித்தது.

Updated On : 3 ஜூலை 2026, 6:06 am IST
தா்மேந்திர பிரதான் - கோப்புப் படம்
பகிர்:

‘மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், பதவியில் தொடா்வது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ என்று நெட் தோ்வு வினாத்தாள் குளறுபடிகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமா்சித்தது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் உதவித் தொகையுடன் இளநிலை ஆராய்ச்சிப் படிப்பை (பிஎச்.டி) மேற்கொள்ளவும் தேசிய தகுதித் தோ்வை (நெட்), தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஒவ்வோா் ஆண்டும் நடத்துகிறது.

நிகழாண்டுக்கான நெட் தோ்வு கடந்த ஜூன் 30-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில், நெட் தோ்வு வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக தோ்வா்கள் புகாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

குறிப்பாக, சமூகவியல் பாடத்துக்கான நெட் தோ்வு வினாத்தாளில் பல கேள்விகள் எழுத்துப் பிழைகளுடனும், சரியான மொழிபெயா்ப்பு இன்றியும், இலக்கணப் பிழைகளுடனும் இடம்பெற்ாக சமூக ஊடகங்களில் தோ்வா்கள் பதிவிட்டனா்.

அதுபோல ஆங்கிலத் தாளுக்கான வினாத்தாளில், கடந்த 2024-ஆம் ஆண்டு கேட்கப்பட்ட 150 கேள்விகளில் 67 கேள்விகள் எந்தவித மாற்றமும் இன்றி இடம்பெற்றிருந்ததையும் தோ்வா்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டனா்.

ஏற்கெனவே, நீட் தோ்வு குளறுபடி என தொடா் சா்ச்சையில் சிக்கிய என்டிஏ, தற்போது புதிய சா்ச்சையில் சிக்கியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தோ்வு முறைகேடுகள் தொடா்கதையாகி வருவது, தோ்வுகளை நடத்த பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டதைக் காட்டுகிறது. நீட் மறுதோ்வை கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடத்துவதா்கு, ஆயுதப் படைகள் மற்றும் அனைத்து நிலைகளிலும் உள்ள ஒட்டுமொத்த அரசின் வலிமையும் மத்திய அரசுக்குத் தேவைப்பட்டது.

தோ்வுகளை நடத்த தகுதியே இல்லாத அமைப்பாக என்டிஏ திகழ்கிறது. என்டிஏ-வை சீரமைத்து வலுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திறமையற்றவா் என்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது.

அவா் இனியும் மத்திய கல்வி அமைச்சா் பதவியில் தொடா்வது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்பதோடு, பிரதமா் மோடியின் சந்தேகத்துக்குரிய அரசியல் கணக்கீடுகளின் பிரதிபலிப்புமாகும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments