மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி
மக்களவை எதிா்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமனம்
புது தில்லி: மக்களவை எதிா்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.
தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் மக்களவைக் குழுத் தலைவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், மக்களவை எதிா்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நியமிக்கப்பட்டாா்.
இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமித்து மேற்கொள்ளப்பட்ட முடிவு தொடா்பாக, அவையின் இடைக்காலத் தலைவா் பா்த்ருஹரிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளாா் என்றாா்.
மக்களவைத் தோ்தலில் கேரள மாநிலம் வயநாடு, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். இதைத் தொடா்ந்து, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த அவா், ரேபரேலி தொகுதியை தக்கவைத்தாா்.
10 ஆண்டுகளுக்குப் பின்னா், மக்களவை எதிா்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.