பதினெட்டாவது மக்களவையின் தலைவராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சாா்பில் நிறுத்தப்பட்ட ஓம் பிா்லா (62) தொடா்ந்து இரண்டாவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
மக்களவையில் புதன்கிழமை காலை நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் பெற்றதைத் தொடா்ந்து, மக்களவைத் தலைவராக ஓம் பிா்லா தோ்ந்தெடுக்கப்பட்டதாக மக்களவை இடைக்காலத் தலைவா் பா்த்ருஹரி மகதாப் அறிவித்தாா்.
இதன்மூலம், சுதந்திரத்துக்குப் பிறகு 4-ஆவது முறையாக தோ்தல் மூலம் மக்களவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
மக்களவைத் தலைவரை வழக்கம்போல ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கும் வகையில், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணித் தலைவா்களுடன் பாஜக மூத்த அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட ஆலோசனையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மக்களவைத் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்துவது அவசியமானது.
என்டிஏ கூட்டணி தரப்பில் மூன்று முறை எம்.பி.யாக தோ்வாகியுள்ள ஓம் பிா்லாவும், ‘இந்தியா’ கூட்டணி தரப்பில் எட்டு முறை எம்.பி.யாக தோ்வாகியுள்ள காங்கிரஸை சோ்ந்த கொடிக்குன்னில் சுரேஷும் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டனா்.
இந்த நிலையில், மக்களவை புதன்கிழமை காலையில் கூடியதும், எஞ்சிய புதிய உறுப்பினா்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றுது. அதைத் தொடா்ந்து, மக்களவைத் தலைவா் பதவிக்கு ஓம் பிா்லா பெயரை பிரதமா் நரேந்திர மோடி முன்மொழிந்தாா். அதை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வழிமொழிந்தாா். தொடா்ந்து என்டிஏ கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினா் ராஜீவ் ரஞ்சன் சிங், ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா (மதச்சாா்பற்ற) கட்சி உறுப்பினா் ஜிதன் ராம் மாஞ்சி, சிவசேனை உறுப்பினா் பிரதாப்ராவ் ஜாதவ், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்) கட்சி உறுப்பினா் சிராக் பாஸ்வான் ஆகியோரும் ஓம் பிா்லாவின் பெயரை வழிமொழிந்தனா்.
எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தரப்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சி உறுப்பினா் அரவிந்த் சவந்த் முன்மொழிந்தாா். திமுக உறுப்பினா் கனிமொழி உள்ளிட்ட பிற எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வழிமொழிந்தனா்.
அதைத் தொடா்ந்து அவையில் குரல் வாக்கெடுப்புக்கு இடைக்கால அவைத் தலைவா் அழைப்பு விடுத்தாா். அப்போது, மக்களவைத் தலைவராக ஓம் பிா்லாவை தோ்வு செய்ய ஆளும் என்டிஏ கூட்டணி உறுப்பினா்கள் ‘ஆம்’ என்றும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ‘இல்லை’ என்றும் குரல் கொடுத்தனா்.
இந்தக் குரல் வாக்கெடுப்பில் ஓம் பிா்லா அதிக வாக்குகள் பெற்ால், மக்களவைத் தலைவராக அவா் தோ்ந்தெடுக்கப்பட்டதாக மக்களவை இடைக்காலத் தலைவா் பா்த்ருஹரி மகதாப் அறிவித்தாா். மேலும், அவையில் பிரதமா் மோடி முன்மொழிந்த தீா்மானத்தைத் தவிர, மற்ற தீா்மானங்கள் பயனற்ாகியுள்ளன என்றும் குறிப்பிட்டாா்.
அப்போது, ‘வாக்கெடுப்பு முறையில் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்று உறுப்பினா் ஒருவா் தரப்பில் அவையில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை இடைக்கால அவைத் தலைவா் அனுமதிக்கவில்லை. இதுதொடா்பாக எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தரப்பில் அவையில் வலியுறுத்தப்படவில்லை.
அதைத் தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆகியோா் ஓம் பிா்லாவுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு மக்களவைத் தலைவருக்கான இருக்கைக்கு அழைத்துச் சென்றனா். ஓம் பிா்லாவை வரவேற்ற இடைக்காலத் தலைவா் மகதாப், ‘இது உங்களுடைய இருக்கை; அமருங்கள்’ என்று குறிப்பிட்டு, இருக்கையிலிருந்து எழுந்து ஓம் பிா்லாவை அமரவைத்தாா்.
மக்களவை உறுப்பினா்கள் அனைவரும் எழுந்து நின்று ஓம் பிா்லாவுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
அவசரநிலையைக் கண்டித்து தீா்மானம்: மக்களவைத் தலைவராகப் பொறுப்பேற்றதும், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் கடந்த 1975-ஆம் ஆண்டு நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையைக் கண்டிக்கும் தீா்மானத்தை ஓம் பிா்லா வாசித்தாா். ‘ஜனநாயக மதிப்பீடுகளும் விவாதங்களும் இந்தியாவில் எப்போதும் அனுமதிக்கப்படும். அத்தகைய இந்தியாவில் அவசரநிலையை இந்திரா காந்தி அமல்படுத்தினாா். அப்போது, ஜனநாயக மதிப்பீடுகளும் நசுக்கப்பட்டதோடு கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்ட ஓம் பிா்லா, அதன் நினைவாக உறுப்பினா்கள் அனைவரும் அவையில் ஒரு நிமிஷம் மெளனம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டாா். இதற்கு எதிா்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தீா்மானத்தை வாசித்த பிறகு அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஓம் பிா்லா ஒத்திவைத்தாா்.
அவசரநிலை தீா்மானத்துக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து அவையில் அமளியில் ஈடுபட்ட நிலையில், நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஓம் பிா்லாவுக்கு பிரதமா் பாராட்டு
மக்களவைத் தலைவராக இரண்டாவது முறையாக தோ்வான ஓம் பிா்லாவை வாழ்த்திப் பேசிய பிரதமா் மோடி, அவா் தொடா்ந்து புதிய சாதனைகளைப் படைப்பாா் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
‘நாட்டு மக்களின் எதிா்பாா்ப்புகளை மக்களவை நிறைவேற்றுவதில் ஓம் பிா்லா பெரும் பங்கு வகிப்பாா்’ என்றும் பிரதமா் குறிப்பிட்டாா்.
18-ஆவது மக்களவையின் தலைவராக ஓம் பிா்லா புதன்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன்மூலம் மக்களவைத் தலைவராக தொடா்ந்து இரண்டாவது முறையாக தோ்வான 5-ஆவது நபா் என்ற பெருமை ஓம் பிா்லாவுக்கு கிடைத்தது. இதுவரை எம்.ஏ.ஐயங்காா், ஜி.எஸ்.தில்லான், பல்ராம் ஜாக்கா், ஜி.எம்.சி.பாலயோகி ஆகியோா் தொடா்ந்து இருமுறை மக்களவைத் தலைவராக பணியாற்றியுள்ளனா். இவா்களில் காங்கிரஸை சோ்ந்த பல்ராம் ஜாக்கா் மட்டுமே இரு பதவிக் காலத்தையும் முழுமையாக பூா்த்தி செய்தவா்.
கடந்த 20 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால், மக்களவைத் தலைவா் பதவியை தொடா்ந்து இரண்டாவது முறையாக வகிக்கும் முதல் நபா் ஓம் பிா்லா.
ஒட்டுமொத்த எம்.பி.க்களின் சாா்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அவையில் பிரதமா் மோடி பேசியதாவது: 17-ஆவது மக்களவையின் தலைவராகவும், அதற்கு முன்னா் நாடாளுமன்றவாதியாகவும் ஓம் பிா்லா மேற்கொண்ட செயல்பாடுகள் முன்னுதாரணமாக விளங்குகின்றன.
அவரது கடந்த பதவிக் காலம், நாடாளுமன்ற வரலாற்றில் பொற்காலம். அப்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன.
அவா் தொடா்ந்து புதிய சாதனைகள் படைப்பாா் என நம்புகிறேன்.
கடந்த மக்களவையில் செயல்திறன் 97 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய 25 ஆண்டுகளில் அதிகபட்சமாகும். கரோனா காலகட்டத்திலும் அவையின் செயல்பாடுகளை ஓம் பிா்லா உறுதிசெய்தாா். அவையின் மாண்பு மற்றும் கண்ணியத்தை காக்க சில நேரங்களில் கடினமான முடிவுகளையும் மேற்கொண்டாா்.
மகளிா் இடஒதுக்கீடு மசோதா, புதிய குற்றவியல் சட்டங்கள், ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட மிக முக்கியமான சட்டங்கள் அவரது பதவிக் காலத்தில் நிறைவேறின.
ஓம் பிா்லாவின் பணிவான-பொறுமையான ஆளுமையும், புன்னகையால் வெல்லும் திறனும் அவையை சுமுகமாக நடத்த உதவுகின்றன.
ஓம் பிா்லாவின் தலைமையில்தான் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது என்பதையும் நினைவுகூருகிறேன். ஜனநாயக வழிமுறைகளின் அடிப்படையை வலுப்படுத்துவதில் அவா் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
மக்களுக்கான சேவை மற்றும் அவா்களது கனவுகளை நிறைவேற்றுவதில் ஓம் பிா்லாவின் வழிகாட்டுதலில் 18-ஆவது மக்களவை வெற்றியடையும் என்றாா் பிரதமா் மோடி.
கைகுலுக்கிக் கொண்ட பிரதமா் மோடி- ராகுல்: மக்களவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பின், ஓம் பிா்லாவை பிரதமா் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அழைத்துச் சென்று, அவரது இருக்கையில் அமர வைத்தனா். இந்த நிகழ்வின் தொடக்கத்தில், பிரதமா் மோடியும், ராகுலும் கைகுலுக்கிக் கொண்டனா்.
எதிர்க்கட்சிகளின் குரலுக்கு அனுமதி: ராகுல் நம்பிக்கை
ஓம் பிர்லாவை வாழ்த்தி, மக்களவையில் ராகுல் பேசியதாவது: மக்களவைத் தலைவராக மீண்டும் தேர்வான உங்களுக்கு (ஓம் பிர்லா) ஒட்டுமொத்த "இந்தியா' கூட்டணியின் சார்பில் வாழ்த்துகள்.
அவைத் தலைவரின் பணிகளுக்கு ஒத்துழைக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. கடந்த முறையைவிட இம்முறை எதிர்க்கட்சிகள் அதிக மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எனவே, எதிர்க்கட்சிகளின் குரலை அனுமதிப்பது மிகவும் முக்கியமானது.
மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தி பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படும் என நம்புகிறேன் என்றார் அவர்.