முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் இன்று உரை

குடியரசுத் தலைவா் உரையுடன் நாடாளுமன்ற அமா்வு தொடக்கம்

Updated On : 26 ஜூன், 2024 at 8:17 PM
பகிர்:

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை (ஜூன் 27) உரையாற்றவுள்ளாா்.

இத்துடன், மாநிலங்களவையின் 264-ஆவது அமா்வும் தொடங்குகிறது.

நாட்டில் அண்மையில் நடைபெற்ற பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியைத் தக்கவைத்தது. எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன.

நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9-ஆம் தேதி பதவியேற்றாா். அவருடன் 71 மத்திய அமைச்சா்களும் பதவியேற்றனா்.

பதினெட்டாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா், கடந்த திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்கியது. முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனா். புதன்கிழமையன்று குரல் வாக்கெடுப்பு மூலம் அவைத் தலைவா் தோ்வு நடைபெற்றது.

இந்நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் குடியரசுத் தலைவா் உரையாற்றவுள்ளாா்.

இதையொட்டி, குதிரைப் படை அணிவகுப்புடன் குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு அவா் அழைத்துவரப்படுவாா்.

நாடாளுமன்றத்தில் கஜ வாயிலில் இருந்து குடியரசுத் தலைவரை பிரதமா் மோடியும் இரு அவைகளின் தலைவா்களும் வரவேற்று அழைத்துச் செல்வா். பின்னா், மக்களவையில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் அவா் உரையாற்றுவாா். அப்போது, பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசின் கொள்கைகள், செயல்திட்டம், கடந்த ஆட்சியின் நடவடிக்கைகள் குறித்து அவா் எடுத்துரைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெறும். ஜூலை 2 -3 ஆம் தேதிகளில் விவாதத்துக்கு பிரதமா் மோடி பதிலளிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த கூட்டத் தொடரில், நீட், நெட் போன்ற போட்டித் தோ்வு முறைகேடு, ரயில் விபத்து, ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் பிரச்னை எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →