நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரை இந்தியாவின் வளர்ச்சிப் பயணம், எதிர்காலத்திற்கான ஒரு தெளிவான திசையைக் காட்டுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று (ஜன. 28 ) தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவரின் "ஊக்கமளிக்கும்" உரையுடன் தொடங்கியது.
இந்தியாவின் நாடாளுமன்ற மரபுகளில், குடியரசுத் தலைவரின் உரைக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஏனெனில், வரும் மாதங்களில் நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு வழிகாட்டும் கொள்கை திசை மற்றும் கூட்டுத் தீர்மானத்தை இது எடுத்துரைக்கிறது.
இன்றைய உரை விரிவானதாகவும் நுண்ணறிவு மிக்கதாகவும் இருந்தது. இது சமீப காலங்களில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பயணத்தைப் பிரதிபலிப்பதுடன், எதிர்காலத்திற்கான ஒரு தெளிவான திசையையும் காட்டியது.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான முக்கியத்துவம் கச்சிதமாக கூறப்பட்டுள்ளது, இது ஒரு வலிமையான மற்றும் தற்சார்பு கொண்ட தேசத்தை உருவாக்கும் நமது கூட்டு லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.
இன்றைய உரை பரந்த அளவிலான தலைப்புகளையும் உள்ளடக்கியிருந்தது. விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தொடர்ச்சியான முயற்சிகளை இது எடுத்துரைத்தது. நல்லாட்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை இது மீண்டும் உறுதிப்படுத்தியது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.