நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, 140 கோடி மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு அமர்வில், குடியரசுத் தலைவர் திரெளபதி உரையாற்றினார்.
இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி பேசியதாவது:
“நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, 140 கோடி மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், குறிப்பாக இளைஞர்களின் லட்சியங்களின் ஒரு சித்திரமாகவும் அமைந்தது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழிகாட்டும் வகையில் குடியரசுத் தலைவர் பல விஷயங்களைக் கூறினார். குடியரசுத் தலைவர் வெளிப்படுத்திய எதிர்பார்ப்புகளை அனைத்து உறுப்பினர்களும் தீவிரமாக எடுத்துக்கொண்டார்கள் என்று நம்புகிறேன்.
21 ஆம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டது. இது அடுத்த கால் பகுதியின் தொடக்கமாகும். வளர்ந்த இந்தியா 2047 என்ற இலக்கை அடைவதற்கான முக்கியமான காலகட்டம் தொடங்கியுள்ளது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிர்மலா நாட்டின் முதல் பெண் நிதியமைச்சராக சீதாராமன் தொடர்ந்து 9-வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். இது நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைமிக்க தருணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கை கொண்ட இந்தியா இன்று உலகிற்கு ஒரு நம்பிக்கையின் ஒளியாக மாறியுள்ளது. ஒரு ஈர்ப்பு மையமாகவும் மாறியுள்ளது. இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது வரவிருக்கும் காலமும், இந்திய இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம், லட்சிய இந்தியாவுக்கானது, லட்சிய இளைஞர்களுக்கானது, தற்சார்பு இந்தியாவுக்கானது. குறிப்பாக, இந்தியாவின் உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் திறன்களை மேம்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.
பட்ஜெட்டின் மீது நாட்டு மக்களின் கவனம் இருப்பது இயல்பே. ஆனால், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்பதே இந்த அரசின் அடையாளமாக இருந்து வருகிறது. இப்போது, நாம் 'சீர்திருத்த எக்ஸ்பிரஸில்' அதிவேகமாகப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' வேகத்தை அதிகரிப்பதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை வழங்கிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் விளைவாக, 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' இன்னும் வேகம் பெற்று வருகிறது.
அனைத்து முடிவுகளிலும், நாட்டின் முன்னேற்றமே நமது இலக்கு. ஆனால் நமது அனைத்து முடிவுகளும் மனிதர்களை மையமாகக் கொண்டவை, நமது பங்கும் திட்டங்களும் மனிதர்களை மையமாகக் கொண்டவை. நாம் தொழில்நுட்பத்துடன் போட்டியிடுவோம், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வோம், தொழில்நுட்பத்தின் திறனை ஏற்றுக்கொள்வோம். ஆனால், இதன் மூலம் மனிதர்களை மையமாகக் கொண்ட அமைப்பை நாம் ஒருபோதும் பலவீனப்படுத்த மாட்டோம். உணர்வுபூர்வமான அணுகுமுறையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, தொழில்நுட்பத்துடன் இணைந்து நாம் முன்னேறிச் செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.