மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் தலித் இளைஞரை நிர்வாணப்படுத்தித் தாக்குதலில் ஈடுபட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவி வந்த காணொளி ஒன்றில் இரண்டு பேர் சேர்ந்து தலித் இளைஞர் ஒருவரை நிர்வாணமக்கித் தாக்கியதில், அந்த இளைஞருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வழிவது போலவும், இருவரும் பெல்ட் மற்றும் துப்பாக்கியின் அடிப்பகுதியால் மேலும் அவரை தாக்குவது போலவும் பதிவாகியுள்ளது.
அதில் அவர்கள் அந்த தலித் இளைஞரை ஆபாசமாகத் திட்டியும், அவருடைய உறவினரான போலிஸ் ஒருவரை வரச் சொல்லுமாறும் கூறுகின்றனர்.இதனை அவர்களுடன் வந்த மற்றொரு நபர் விடியோவில் பதிவு செய்துள்ளார்.
பின்னர், அவரை நிர்வாணமாக அங்கிருந்து துரத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நான்கு நாள்களுக்கு முன்பு நடந்ததாகவும், தாக்குதலுக்கானக் காரணங்கள் இப்போது வரை தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
சத்தர்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அகம் ஜெயின், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசுகையில், தாக்குதலுக்கு ஆளான நபர் சம்பவம் நடந்த அன்று இரவு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாகவும், குற்றவாளிகள் அவரை வழிமறித்து கூட்டிச் சென்று தாக்கியதாகவும் கூறினார்.
மேலும், அந்தக் காணொளியை வைத்து குற்றவாளிகளான தேவேந்திர தாக்கூர், லக்கி கோஷி, அன்னு கோஷி ஆகிய மூன்று பேரையும் கைது செய்ததாகவும், அவர்களின் துப்பாக்கியைப் பறிமுதல் செய்ததாகவும், குற்றவாளிகள் முன்னரே குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு ஆளானவர் அளித்தப் புகாரைத் தொடர்ந்து கொலைமுயற்சி, கடத்தல், கொள்ளை மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளாது.
குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவத்தில் மேலும் எவருக்கும் தொடர்பு இருந்தால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.