செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மூவர் சென்னையில் கைது!
செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மூவர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
மாதவரம்: சென்னையை அடுத்த மாதவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் நடந்து செல்வோரின் செல்போன்களை பறிப்பது உள்ளிட்ட தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருட்டுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம், விலை உயர்ந்த 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை மாதவரம், புழல் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும் மர்ம நபர்கள் செல்போன்களை பறித்து செல்வதாக வந்த புகார்களின் அடிப்படையில் புழல் சரக உதவி ஆணையாளர் சிபுக்குமார், சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.
Advertisement
மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் கோபிநாத் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து தனிப்படை குழுவாக அமைத்தார். பிறகு சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து குற்றவாளிகளை ஆராய்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகில் சந்தேகத்திற்கிடமாக உயர்ரக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக போலீசார் விசாரணையில் வண்ணாரப்பேட்டை, கீரை தோட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 24 ), முஹம்மத் ஷரீஃப் (வயது 20 ), வினோத்( வயது 19 ) ஆகிய மூவரும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடும் கூட்டாளிகள் என்பதும் ஏற்கனவே செவ்வாய்பேட்டையில் ஒரு நபரின் விலை உயர்ந்த R.1,5 இருசக்கர வாகனத்தை திருடி வண்ணாரப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்த போது வரும் வழியில் புழல், மாதவரம் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு நடந்து செல்வோரிடமும் பேருந்துக்காக காத்து நிற்பவர்களையும் மிரட்டி அவர்களின் செல்போன்களை பறித்துச் சென்று மோர்மார்க்கெட்டில் பாதி விலைக்கு விற்று பணமாக்கி கஞ்சா போதைக்கும், தனது காதலிக்கும் செலவழிப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது
பின்னர், இவர்கள் மூன்று பேரின் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தையும் 5 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.
மேலும் இவர்கள் மீது வண்ணாரப்பேட்டை, மெரினா, ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, பெரியபாளையம், ஏழு கிணறு ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக தெரியவந்தது.
குற்றவாளிகளைத் தேடி தீவிர விசாரணையில் ஈடுபட்ட மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் கோபிநாத் மற்றும் தனிப்படை போலீசார் குழுவினருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.