தேர்தல்: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் புறப்பட்டதால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் புறப்பட்டதால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறுகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் தங்கி பணியாற்றி வரும் வெளியூர்வாசிகள் புதன்கிழமை பிற்பகல் முதலே தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்படத் தொடங்கினர்.
Advertisement
மதுரை, சேலம், காஞ்சிபுரம், வேலூர், கும்பகோணம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், அடையாறு உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பேருந்துகளில் இடம்பிடிக்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறிப்பாக, குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் பெரிதும் அவதிப்பட்டனர்.
வழிநெடுகிலும் பயணிகள் கூட்டம்: மதுரை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கும்பகோணம், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மட்டுமின்றி கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகளை ஏற்றிச் சென்றன.
இதேபோல், வேலூர், தருமபுரி, சேலம், பெங்களூரு, காஞ்சிபுரம், திருப்பதி செல்லும் பயணிகள் பலர் கோயம்பேடு, மாதவரம் ஏரிக்கரை, நெற்குன்றம் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலும் காத்திருந்தனர். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகளில் ஏற பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, போரூர் சுங்கச்சாவடி பகுதிகளிலும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்துகளைப் பிடிக்க பெருங்களத்தூர், வண்டலூர், படப்பை பகுதிகளிலும், அடையாறு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்துகளில் ஏறுவதற்காக திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்: தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் கார்களில் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்ட பயணிகளால் கிளாம்பாக்கம்-விழுப்புரம் சாலை, கோயம்பேடு}வேலூர் சாலை, மாதவரம், தாம்பரம், அடையாறு பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களால் ஜிஎஸ்டி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதன்கிழமை மாலை 3 மணிக்கு ஏற்பட்ட இந்தப் போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு 12 மணி வரை நீடித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தென்மாவட்ட ரயில்களில் கூட்டநெரிசல்: இதேபோல, எழும்பூரிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள், முன்பதிவு செய்யாதவர்கள் என ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்துக்கொண்டு ஏறினர்.
முன்பதிவு செய்யாதவர்களும் முன்பதிவு பெட்டியில் ஏறியதால், பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளுக்கு கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.