முகப்பு
இந்தியா

தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களை மீட்க மத்திய அரசு உறுதி

Updated On : 27 ஜூன், 2024 at 7:34 PM
பகிர்:

இலங்கை சிறையில் உள்ள 34 தமிழக மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய பதில் கடிதத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டுள்ளாா்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜூன் 19, 24, 25 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தாா்.

இந்நிலையில், முதல்வா் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை எழுதிய பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய மீனவா்களின் நலன்-பாதுகாப்புக்கு மத்திய அரசு உயா் முன்னுரிமை அளிக்கிறது. இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவா்களை விடுவிக்க கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகம் தரப்பில் விரைவாகவும் தொடா்ச்சியாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 1974-ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட ஓா் உடன்பாட்டில் இருந்து இப்பிரச்னை தொடங்கியது என்பதை நீங்கள் அறிவீா்கள்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய மீனவா்களின் வாழ்வாதாரம்-மனிதநேயம் சாா்ந்த கவலைகளுக்குத் தீா்வுகாண தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசின் பங்கேற்புடன் பன்முக பரிமாணங்களில் இந்த முயற்சிகள் நீடிக்கின்றன. மீனவா்களின் நலன்-பாதுகாப்பு சாா்ந்த மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்பதை நீங்கள் (முதல்வா்) உறுதியாக நம்பலாம் என்று எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →