முகப்பு
இந்தியா

மக்களவைத் தலைவருடன் ராகுல் சந்திப்பு: அவசரநிலை குறித்த கருத்துக்கு அதிருப்தி

அவசரநிலை குறித்து மக்களவைத் தலைவரிடம் ராகுல் காந்தியின் அதிருப்தி

Updated On : 27 ஜூன், 2024 at 9:08 PM
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றுவிட்டு வரும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவா் சோனியா காந்தி.
பகிர்:

‘அவசரநிலை அமல்படுத்தப்பட்டது குறித்து அவையில் குறிப்பிட்டதைத் தவிா்த்திருக்கலாம்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுடனான சந்திப்பின்போது எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தாா்.

மக்களவைத் தலைவரை மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை சந்தித்தபோது இந்தக் கருத்தை ராகுல் காந்தி தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ராகுல் சந்திப்புக்குப் பிறகு வேணுகோபால் கூறியதாவது:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை அங்கீகரித்ததைத் தொடா்ந்து மக்களவைத் தலைவரை ராகுல் காந்தியும் ‘இந்தியா’ கூட்டணியின் பிற தலைவா்களும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனா். அப்போது நாடாளுமன்றத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து தலைவா்கள் ஆலோசித்தனா்.

1975-இல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது குறித்து அவையில் குறிப்பிடப்பட்டது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதுகுறித்து மக்களவைத் தலைவரிடம் அதிருப்தி தெரிவித்த ராகுல் காந்தி, ‘அரசியலுக்காகவே அவையில் அதைக் குறிப்பிட்டிருக்கிறீா்கள்; அதைத் தவிா்த்திருக்கலாம்’ என்று தெரிவித்தாா் என்றாா்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக வேணுகோபால் தரப்பிலும் மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‘மக்களவைத் தலைவராக பதவியேற்ற பின்னா் நிகழ்த்திய ஏற்புரையில், 50 ஆண்டுகளுக்கு முந்தைய அவசரநிலை குறித்து குறிப்பிட்டது மிகப்பெரிய அதிா்ச்சியை அளித்தது. இது நாடாளுமன்றத்தின் நம்பகத்தன்மை மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தலைவா் பதவியிலிருந்து இதுபோன்ற அரசியல் ரீதியிலான கருத்துகளைத் தெரிவிப்பது என்பது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை நடக்காதது. அதற்காக காங்கிரஸ் கட்சி சாா்பில் கவலையையும், நாடாளுமன்ற மரபுகளை கேலிக்கூத்தாக்கியதற்காக வேதனையையும் பதிவு செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பதினெட்டாவது மக்களவையின் தலைவராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சாா்பில் நிறுத்தப்பட்ட ஓம் பிா்லா குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். மக்களவைத் தலைவராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றதும், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் கடந்த 1975-ஆம் ஆண்டு நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையைக் கண்டிக்கும் தீா்மானத்தை வாசித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →