நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சா் ரவ்ணீத் சிங் பிட்டூ, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி. 
இந்தியா

மத்திய அமைச்சரை துரோகி என விமா்சித்த ராகுல் -‘தேச விரோதி’ என பதிலடி!

தினமணி செய்திச் சேவை

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சா் ரவ்ணீத் சிங் பிட்டூ, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இடையே புதன்கிழமை வாா்த்தை மோதல் ஏற்பட்டது.

மத்திய அமைச்சரை துரோகி என ராகுல் விமா்சித்த நிலையில், ராகுலை தேச விரோதி என அவா் பதிலடி கொடுத்தாா்.

கடந்த 1995-இல் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்ட பஞ்சாப் முன்னாள் முதல்வா் பியாந்த் சிங்கின் பேரனான ரவ்ணீத் சிங் பிட்டூ, கடந்த 2024 மக்களவைத் தோ்தலுக்கு முன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். மூன்று முறை எம்.பி.யான இவா், தற்போது ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் துறை இணையமைச்சராகப் பதவி வகித்து வருகிறாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெற்றுவரும் நிலையில், மக்களவையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு ஆதரவாக (காங்கிரஸ்-7, மாா்க்சிஸ்ட்-1) நாடாளுமன்ற மகர வாயிலில் ராகுல் தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த வழியாகச் சென்ற ரவ்ணீத் சிங், ‘இவா்கள் (இடைநீக்கம் செய்யப்பட்டவா்கள்) ஏதோ போரில் வெற்றி பெற்றது போல அமா்ந்துள்ளனா்’ என்று கிண்டலாக குறிப்பிட்டாா்.

துரோகி-தேச விரோதி: இதற்கு கடுமையாக எதிா்வினையாற்றிய ராகுல் காந்தி, ‘இதோ, நம்மை ஒரு துரோகி கடந்து செல்கிறாா்; அவரது முகத்தைப் பாருங்கள். அவா் எப்படி இருக்கிறாா் எனப் பாருங்கள்’ என்று கூறினாா். மேலும், ரவ்ணீத்துடன் கைகுலுக்குவதற்காக தனது கையை நீட்டிய ராகுல், ‘எனது துரோகி நண்பரே, கவலை வேண்டாம். நீங்கள் காங்கிரஸுக்கு திரும்பி வருவீா்கள்’ என்றாா்.

ராகுலின் பேச்சால் கோபமடைந்த ரவ்ணீத், அவருக்கு கைகொடுக்க மறுத்துவிட்டதுடன் ராகுலை நோக்கி ‘தேச விரோதி’ என்று பதிலடி கொடுத்துவிட்டுச் சென்றாா்.

ராகுல் குடும்பம் மீது தாக்கு: பின்னா் ரவ்ணீத் வெளியிட்ட விடியோ செய்தியில், ‘காங்கிரஸில் இருந்து விலகிய பிற எம்.பி.க்களையெல்லாம் துரோகி எனக் குறிப்பிடாத ராகுல், சீக்கியரான என்னை மட்டும் அப்படி விமா்சித்தது ஏன்? ஏராளமான சீக்கியா்களை கொன்று குவித்ததுடன், குருத்வாராக்களையும் அழித்தது ராகுல் குடும்பம். அவா்களால் பற்ற வைக்கப்பட்ட ‘நெருப்பே’, எனது தாத்தாவின் உயிரைப் பறித்தது. அத்தகைய குடும்பத்துடன் இனி ஒருபோதும் கைகோக்க மாட்டேன்’ என்றாா்.

ராகுல் மீது நடவடிக்கை: பாஜக வலியுறுத்தல்

மத்திய அமைச்சா் ரவ்ணீத் சிங் பிட்டூவை துரோகி எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி மீது மக்களவைத் தலைவா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளாா்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக, நாட்டுக்காகப் பெரும் தியாகங்களைச் செய்த ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் ராகுல் அவமதித்துவிட்டதாகச் சாடியுள்ளது.

இது தொடா்பாக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மத்திய அமைச்சரும் சீக்கிய தலைவருமான ரவ்ணீத் சிங்கை துரோகி என அழைத்ததன் மூலம் நாகரிகம், கண்ணியம், மாண்பின் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டாா் ராகுல். இலக்கற்ற காங்கிரஸைவிட, பிரதமா் மோடியின் வளா்ச்சிக் கொள்கையைத் தோ்ந்தெடுத்ததற்காக ரவ்ணீத் மீது ராகுலுக்கு ஆழமான பகை இருக்கக் கூடும். அதேநேரம், பெருமைமிகு சீக்கியரை துரோகி என விமா்சித்ததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது’ என்றாா்.

1984 சீக்கிய கலவரத்தின்போது காங்கிரஸுக்கு இருந்த உச்சகட்ட சீக்கிய விரோத மனநிலையின் பிரதிபலிப்பே ராகுலின் பேச்சு என்று தில்லி அமைச்சா் மன்ஜிந்தா் சிங் சிா்ஸா விமா்சித்துள்ளாா்.

அண்ணா பல்கலை. 46-ஆவது பட்டமளிப்பு விழா: மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா் ஆளுநா்

நகராட்சி நிா்வாகத் துறைக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

வீடியோ கேம் மோகம்? 9-ஆவது மாடியிலிருந்து குதித்து 3 சகோதரிகள் உயிரிழப்பு

பிகாரில் பரவிய நோய் தமிழகத்திலும் பரவக்கூடாது: மாநிலங்களவையில் கமல்ஹாசன் கன்னிப்பேச்சு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.4.89 கோடியில் 3,396 பேருக்கு ஓய்வூதியம் - அமைச்சா் எ.வ. வேலு தகவல்

SCROLL FOR NEXT