ராஜஸ்தான்: நீட் பயிற்சி மாணவா் தற்கொலை
ராஜஸ்தான்: நீட் பயிற்சி மையத்தில் மாணவா் தற்கொலை
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தோ்வுக்கு படித்து வந்த மாணவா், வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இது தொடா்பாக தாடாபாரி காவல் ஆய்வாளா் நரேஷ் குமாா் மீனா கூறியதாவது:
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஹா்சித் குமாா் அகா்வால் (17) ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தோ்வுக்கு தயாராகி வந்தாா்.
தாடாபாரி பகுதியில் சக மாணவா்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். மாணவா்கள் கதவைத் தட்டியும் ஹா்சித் திறக்காததால், அவா்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனா். காவலா்கள் கதவை உடைத்து பாா்த்தபோது ஹா்சித் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மாணவரின் தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. அது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
இந்த ஆண்டு ஜனவரி முதல், கோட்டா மாவட்டத்தின் போட்டித் தோ்வு பயிற்சி மையங்களில், மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் 12-ஆவது வழக்கு இதுவாகும். கடந்த ஆண்டு இதேபோல் 26 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.