புது தில்லி: புது தில்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வந்த நிலையில், தில்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு தில்லி விமான நிலைய மேற்கூரைகளில் ஓட்டைகள் ஏற்பட்டு தண்ணீர் அருவி போல கொட்டியது. இன்று அதிகாலை திடீரென ஒட்டுமொத்த மேற்கூரையும் சரிந்து கீழே விழுந்ததில், ஒருவர் பலியானார். 6 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால், இன்று காலை தில்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவது, விமானப் புறப்பாடு அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.
உலக தரத்திலான விமான நிலையம் என்று கூறப்பட்டு வந்த தில்லி விமான நிலையம், ஒரு நாள் மழைக்கே இந்த கதியை அடைந்திருப்பது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கடந்த மார்ச் 10ஆம் தேதி, இந்த முதல் முனையத்தை பிரதமர் நரேந்திர மோடிதான் திறந்துவைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விமான நிலையத்தின் முதல் முனைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததற்கு, அங்கிருந்த பழைய கட்டுமானமே காரணம், அது 2009ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் கவனத்துடன் கையாள்கிறோம், இங்கு நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது, விமான நிலையத்தின் மறுப்பக்கத்தைத்தான், இந்தப் பக்கத்தில் இருக்கும் கட்டுமானங்கள் 2009ஆம் ஆண்டு கட்டப்பட்டவை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆனால், கார்கே இதனை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், அதாவது, ஊழல் மற்றும் குற்றவியல் கவனக்குறைவுதான் இந்த மேற்கூரை விழுந்த சம்பவத்துக்குப் பொறுப்பு என்றும், பிரதமர் நரேந்திர மோடி சொல்வது போல உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு என்பதையும் அவர் விமரிசித்துள்ளார்.
மேலும், தில்லி விமான நிலையத்தின் முதல் முனைய மேற்கூரை, ஜபல்பூர் விமான நிலைய மேற்கூரை, அயோத்தியாவில் புதிய சாலைகளில் விரிசல், ராமர் கோயிலில் மழை நீர் கசிவு, மும்பை துறைமுக இணைப்புச் சாலையில் விரிசல், கடந்த இரண்டு ஆண்டுகளில் பிகாரில் 13 பாலங்கள் இடிந்து விழுந்து விபத்து என, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் இணைந்து உலகத் தரத்திலான கட்டுமானம் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது உண்மையல்ல என்பதை வெளிப்படுத்துகின்றன என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.