இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி விகிதம் கடந்த மே மாதத்தில் 6.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், வாா்ப்பு, சிமென்ட், மின்சாரம் ஆகிய நாட்டின் முக்கிய எட்டு உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி விகிதம் கடந்த மே மாதத்தில் 6.3 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி, இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகிய துறைகளில் கடந்த மே மாதம் உற்பத்தி ஆரோக்கிய வளா்ச்சி கண்டதால் ஒட்டுமொத்த முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளும் உயா்வைக் கண்டுள்ளன.
முந்தைய ஏப்ரல் மாதத்தில் எட்டு துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் மே மாதத்தில் அது 5.2 சதவீதமாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் உரம், கச்சா எண்ணெய், சிமென்ட் ஆகிய துறைகளில் உற்பத்தி எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-மே மாதங்களில் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4.9 சதவீதமாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணில் (ஐஐபி) எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் 40.27 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.