மகாராஷ்டிரத்தில் காலில் ஏற்பட்ட காயத்திற்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, தவறுதலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பினை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஷாஹாப்பூரில் ஒன்பது வயது சிறுவன், கடந்த மாதம் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக ஜூன் 15ஆம் தேதி ஷாஹாப்பூரின் துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
இந்நிலையில், காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு, மருத்துவர் குழு தவறுதலாக சிறுவனின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர், தவறினை உணர்ந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக சிறுவனின் காலில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, ``சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டதைத் தவிர, சிறுவனுக்கு ஃபிமோசிஸ் பிரச்சினையும் இருந்தது. அதாவது, பிறப்புறுப்பின் தோல் இறுக்கமாக இருந்தது. ஆகையால் சிறுவனுக்கு இரண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மேலும் ஃபிமோசிஸ் சிகிச்சை குறித்து பெற்றோருக்குத் தெரிவிக்காமல், மருத்துவர்கள் மறந்திருக்கலாம்” என்று கூறுகின்றனர்.
இருப்பினும், மருத்துவர்கள் அளித்த விளக்கத்தை பெற்றோர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
மருத்துவமனையின் இந்த கவனக்குறைவினால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் இதுவரை எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும், இருப்பினும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.