அதானியுடன் ரேவந்த் ரெட்டி 
இந்தியா

மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திடம் வழங்கும் தெலங்கானா முதல்வர்!

ஹைதராபாத் பழைய நகரப் பகுதியின் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திடம் வழங்குவதாக தெலங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.

DIN

ஹைதராபாத்திலுள்ள பழைய நகரப் பகுதியின் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு மற்றும் மின் விநியோக உரிமையை அதானி குழுமத்திற்கு வழங்குவதாக, தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடந்த வியாழனன்று (ஜூன் 27) தில்லியில் அறிவித்துள்ளார்.

கௌதம் அதானி குழுமத்திடம் முன்னோடி திட்டமாக பழைய நகரப் பகுதியின் பொறுப்பு வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மின் நுகர்வோர் கட்டணத்தைச் செலுத்தாமல் இருப்பதும், மின்வாரிய ஊழியர்கள் அதனை வசூலிக்கச் சென்றால் அந்தப் பகுதி மக்களால் தாக்குதலுக்கு ஆளாவதுமே தனியாரிடம் பொறுப்பை வழங்குவதற்கான காரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழைய நகரப் பகுதியின் முன்னோடி திட்டத்திற்குப் பிறகு, அதானி குழுமத்திடம் ஹைதரபாத் நகர மின் விநியோகப் பொறுப்பை வழங்கவுள்ளதாகவும், அதன் பின்னர் மாநிலம் முழுவதற்குமான பொறுப்பை வழங்க இருப்பதாகவும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில் அதானி குழுமத்திற்கு 25 சதவீதமும், மாநில அரசுக்கு 75 சதவீதமும் வழங்கப்படும் என்றும், இதற்கான பேச்சுவார்த்தை இரு தரப்பினரிடையே நடைபெற்று அதில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முடிவு குறித்து பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சி கடுமையாக விமர்சனம் வைத்துள்ளது. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மன்னே கிரிஷாங்க் கூறுகையில், ”தெலங்கானாவில் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்துள்ளார் ரேவந்த் ரெட்டி. இதில், 25 சதவீத வருவாய் அதானிக்குப் போக இருக்கின்றது. இது தெளிவான பகல் கொள்ளை.

அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பொதுத் துறைகளை ஒப்படைப்பது பற்றி காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கட்சி பழைய நகரப் பகுதியினரிடம் வைத்திருக்கும் மரியாதை இதுதானா? ’கிருஹ ஜோதி’ திட்டத்தின் கீழ் காங்கிரஸ் உண்மையிலேயே இலவச மின்சாரம் கொடுக்கிறது என்றால், ஹைதராபாத்தில் வீட்டு மின் கட்டணத்தை வசூலிக்கத் தனியார் நிறுவனத்தை ஏன் ஈடுபடுத்துகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT