புதுதில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த சுவா் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளா்கள் உயிரிழந்தனர்.
தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் தேங்கி, சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், ‘வெள்ளிக்கிழமை(ஜூன் 28) வசந்த் விஹாா் பகுதியில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த சுவா் இடிந்து விழுந்ததில் அங்கு பணியில் இருந்த மூவர் இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டதாக அதிகாலை 5.30 மணியளவில் தில்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தபட்டன. என்டிஆா்எஃப், டிடிஎம்ஏ, குடிமை முகமைகள், தீயணைப்பு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து கட்டுமானப் பணியாளர்கள் மூவரின் உடல்களும் சனிக்கிழமை(ஜூன் 29) மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மழைக்கு நடுவே மிகுந்த சிரமப்பட்டு 3 தொழிலாளர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
வேறு யாரேனும் இடர்பாடுகளில் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறிய தேடுதல் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்கள் 19 வயதான சந்தோஷ் குமார் யாதவ் மற்றும் 38 வயதான சந்தோஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். மற்றொரு நபரின் அடையாளம் தெரியவில்லை. அவரை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 3 பேரின் உடல்களும் மருத்துவமனைக்கு அனுப்பட்டு அங்கு உடற்கூராய்வு செய்யப்பட்ட பின் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவர் இடிந்த விபத்தைத் தொடர்ந்து, புதுதில்லியில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
புதுதில்லி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில், விமானம் புறப்படும் பகுதியில் ஒரு விதானம் இடிந்து விழுந்தது. இதில் ஒருவா் பலியானாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.