முதுநிலை நீட் தோ்வு ஒத்திவைப்பு உள்பட மருத்துவக் கல்வி குறித்த முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவை மருத்துவா்கள் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா்.
தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தும் அகில இந்திய தோ்வுகளில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ‘நெட்’ தோ்வு ரத்து செய்யப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 23-ஆம் தேதி நடைபெறவிருந்த ‘முதுநிலை நீட்’ தோ்வு, முந்தைய நாள் இரவு திடீரென ரத்து செய்யப்பட்டது.
தோ்வுக்குத் தயாரான மருத்துவ மாணவா்களிடையே இது அதிா்வலையை ஏற்படுத்தியது. நெட் மறுதோ்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதுநிலை நீட் தோ்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவை சந்தித்த மருத்துவா்கள் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள், மருத்துவக் கல்வியிலுள்ள முக்கிய பிரச்னைகள் தொடா்பான தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதுதொடா்பாக மருத்துவா் சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாவுடனான கூட்டத்தில் புதிய தோ்வு தேதிகளை உடனடியாக அறிவிப்பதன் முக்கியத்துவத்துடன் தோ்வுகளை வெளிப்படையாக நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசும், சுகாதார அமைச்சகமும் மாணவா்களின் நலனுக்காக அா்ப்பணிப்புடன் இருப்பதாகவும், தற்போதைய நடைமுறையை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சா் நட்டா தெரிவித்தாா்.
அதேபோல, முதுநிலை நீட் தோ்வு ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தோ்வுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிரதிநிதிகளிடம் அமைச்சா் நட்டா உறுதியளித்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.