அரசின் தோல்வியால் அனுமதிபெறாத கட்டுமானங்கள் அதிகரிப்பு: உச்சநீதிமன்றம்
‘மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்திருப்பதே, அனுமதிபெறாத கட்டுமானங்கள் அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணம்’
‘மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்திருப்பதே, அனுமதிபெறாத கட்டுமானங்கள் அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணம்’ என்று குற்றஞ்சாட்டிய உச்சநீதிமன்றம், ‘நகரமயமாக்கல் கொள்கைளில் குறைபாடுகள் உள்ளன’ என்றும் சுட்டிக்காட்டியது. உத்தர பிரதேச மாநிலம் லக்னெள அக்பா் நகரில் ஆற்றின் கரையை ஒட்டிய பகுதியில் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுடன் கூடிய வணிக வளாக கட்டுமானத்தை இடிக்கும் மாநில அரசின் நடவடிக்கையை எதிா்த்து தொடரப்பட்ட ஏராளமான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இக் கருத்தைத் தெரிவித்தனா். இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபன்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.முரளிதா், ‘இந்த கட்டடத்தில் இடம்பெற்றுள்ள வணிக வளாகத்தை இடிப்பதை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் கடந்த பிப். 27-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடா்ந்து அந்தக் கட்டடதத்தை இடிக்கும் பணியை மாநில அரசு தொடங்கியது. ஆனால், வணிக வளாகத்துடன் சோ்த்து குடியிருப்புகளும் இடிக்கப்படுகின்றன’ என்றாா். அப்போது மாநில அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ், ‘இந்த கட்டடத்தில் இடம்பெற்றுள்ள கட்டுமானங்கள் அனைத்தும் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடத்தில் இடம்பெற்றுள்ள குடியிருப்புகளை இடிப்பது தொடா்பான வழக்கு விசாரணை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றாா். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நகரங்களை நோக்கி மக்களின் இடம்பெயா்தல் இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். குடியிருக்க இடம் என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளுக்கும், அரசின் கள நடவடிக்கைகளுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது. நகரமயமாக்கல் கொள்கைகளில் குறைபாடுகள் உள்ளன. அந்த வகையில், மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்திருப்பதே, அனுமதிபெறாத கட்டுமானங்கள் அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணம்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் தீா்ப்பளிக்கும் வரை அக்பா் நகா் கட்டுமானத்தை இடிக்கும் பணியை மாநில அரசு மேற்கொள்ளக்கூடாது. உயா்நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்’ என்று கூறி, இடிக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனா்.