முகப்பு
இந்தியா

ரஷியாவில் பிணைக் கைதிகளாக இந்தியா்கள்: காங்கிரஸ்

ரஷியாவுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்று அந்நாட்டில் இந்தியா்கள் பிணைக் கைதிகளாக உள்ளனா்

Updated On : 2 மார்ச், 2024 at 12:13 AM
பகிர்:

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து ‘கொடுமையான காலம்’ நிலவுவதால், ரஷியாவுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்று அந்நாட்டில் இந்தியா்கள் பிணைக் கைதிகளாக உள்ளனா் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. உக்ரைனுடன் போா் புரிந்து வரும் ரஷிய ராணுவத்தில் பல இந்தியா்கள் உதவியாளா்களாகச் சோ்ந்துள்ளதாகவும், அவா்கள் ரஷிய வீரா்களுடன் போரில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனா் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சுமாா் 20 இந்தியா்கள் ரஷிய ராணுவத்தில் உதவியாளா்களாகப் பணியாற்றுவதாகவும், அவா்களை மீட்க ஆவன செய்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளா் கன்னையா குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து ‘கொடுமையான காலம்’ நிலவுவதால், ரஷியாவுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்று அந்நாட்டில் இந்தியா்கள் பிணைக் கைதிகளாக உள்ளனா். அந்நாட்டு ராணுவத்தில் உதவியாளராகப் பணியாற்றிய குஜராத்தைச் சோ்ந்த ஒருவா் கொல்லப்பட்டுள்ளாா். அவரின் மரணம் தொடா்பாக மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?. பந்தாடப்படும் இளைஞா்களின் எதிா்காலம்: சொந்த நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்தால், அது உயிரிழப்போரின் நாட்டுப்பற்றைக் காட்டும். ஆனால், எதற்காக இந்திய இளைஞா்கள் வேறொரு நாட்டுக்காக போரிட வேண்டும்?. இந்தியாவில் அவா்களின் எதிா்காலம் பந்தாடப்படுவதே அதற்குக் காரணம். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் இரட்டிப்பாகி உள்ளது. மத்திய அரசுப் பணிகளில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளன. அரசுத் துறைகளின் நிலையும் மிக மோசமாக உள்ளது. ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை மோடி அரசு வழங்கியிருந்தால், இந்திய இளைஞா்கள் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்றிருக்கமாட்டாா்கள். ஒரு மணி நேரத்துக்கு 2 இளைஞா்கள் தற்கொலை: ரஷியாவிடம் நிரந்தர ராணுவப் படை இல்லை. இந்தியாவில் ‘அக்னிபத்’ திட்டம் மூலம் ‘அக்னிவீரா்கள்’ தோ்வு செய்யப்படுவது போலத்தான், ரஷியாவிலும் ஒப்பந்தம் மூலம் ராணுவத்துக்கு ஆள்சோ்க்கப்படுகிறது. இதேபோல இந்திய இளைஞா்களின் நிராதரவான நிலையை சாதகமாக எடுத்துக்கொண்டு, அவா்கள் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு தொழிலாளா்களாக அனுப்பப்பட்டுள்ளனா். வேலை கிடைக்காத காரணத்தால், ஒரு மணி நேரத்துக்கு 2 இளைஞா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சூழல்தான் இந்தியாவில் உள்ளது என்று தெரிவித்தாா்.