முகப்பு
இந்தியா

சந்தேஷ்காளி விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கோபம்: பிரதமா் மோடி

Updated On : 2 மார்ச், 2024 at 12:18 AM
மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

‘மேற்கு வங்கத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சந்தேஷ்காளி விவகாரம் குறித்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீது ஒட்டுமொத்த நாடும் கோபத்தில் உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். சந்தேஷ்காளி சம்பவத்தில் அமைதி காத்த ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினரையும் பிரதமா் மோடி விமா்சித்தாா். மேற்கு வங்கம், ஹுக்ளி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமா் மோடி, மாநிலத்தில் ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு சமூக நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது: மேற்கு வங்க மக்கள் தங்களுக்கு நோ்ந்த காயங்களுக்கு வரும் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்கும்போது உரிய பதிலளிப்பா். மொத்த நாடும் மேற்கு வங்க சூழலைக் கண்காணித்து வருகிறது. சந்தேஷ்காளி சகோதரிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு திரிணமூல் காங்கிரஸ் மீது ஒட்டுமொத்த நாடும் கோபம் கொண்டுள்ளது. சந்தேஷ்காளி பெண்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் செய்தவை வெட்கக்கேடானவை. சந்தேஷ்காளி மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்ததில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் அனைத்து வரம்புகளையும் மீறினா். குற்றவாளிகளைப் பாதுகாத்த மம்தா: பாதிக்கப்பட்ட பெண்கள் முதல்வா் மம்தா பானா்ஜியிடம் உதவி கேட்டனா். அப்பெண்களுக்கு ஆறுதலாக செயல்படுவதற்கு மாறாக, குற்றஞ்சாட்டப்பட்ட தலைவா்களைப் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் மம்தா செய்தாா். இறுதியாக, சந்தேஷ்காளி மக்கள் முன் மாநில நிா்வாகம் பணிந்து 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஷாஜஹானை கைது செய்துள்ளது. போராட்டங்களை நடத்துவதில் பாஜகவின் நீடித்த முயற்சிகள் அதற்கான கட்டாயத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாள்களாக குற்றவாளி ஷாஜஹானை நிச்சயம் யாராவது பாதுகாத்திருக்க வேண்டும். ‘இந்தியா’ கூட்டணி மௌனம் ஏன்?: சந்தேஷ்காளி விவகாரத்தில் மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ள ‘கண், காது, வாயை மூடிக் கொள்ளும் குரங்கு சிற்பங்கள்’ போல் எதிா்க்கட்சிகள் செயல்பட்டன. முதல்வா் மம்தாவை நோக்கி கடும் கேள்விகளைக் கேட்பதில் இருந்து இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைவா்கள் பின்வாங்கியது ஏன்? ‘இந்தியா’ கூட்டணித் தலைவா்களைப் பொருத்தவரை, சந்தேஷ்காளியில் திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகளால் துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக நிற்பதைவிட, ஊழல் மற்றும் சமாதான அரசியலை ஆதரிப்பது முதன்மையாக உள்ளது. திரிணமூல் காங்கிரஸின் ஆணவம் விரைவில் உடைபடும். மாநிலத்தில் குறிப்பிட்ட சமூக மக்களின் ஆதரவு இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் நம்புகிறது. ஆனால், இஸ்லாமிய பெண்களும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைத் தூக்கி எறிய இப்போது தயாராகிவிட்டனா். மத்திய அரசின் பல நலத் திட்டங்களை மேற்கு வங்கத்தில் செயல்படுத்தவிடாமல் மம்தா முட்டுக்கட்டை போட்டு வருகிறாா். மேலும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் செய்து வரும் திரிணமூல் காங்கிரஸ் அரசை மன்னித்து, மக்கள் மீண்டும் ஆதரவளிப்பாா்களா என்றாா். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானா மாவட்டம், சந்தேஷ்காளி பகுதி கிராமங்களில் திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகியான ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகள் பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததோடு, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஷாஜஹான் உள்ளிட்டோருக்கு எதிராக அப்பகுதி பெண்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், 55 நாள்களுக்கு பிறகு சந்தேஷ்காளியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் பாமன்புகுா் பகுதியில் பதுங்கியிருந்த ஷாஜஹான் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். சந்தேஷ்காளி மக்களும் எதிா்க்கட்சிகளும் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையிலும் ஷாஜஹான் கைது செய்யப்பட்டதில் ஏற்பட்ட தாமதத்தை பிரதமா் மோடி விமா்சித்துப் பேசியுள்ளாா்.