இந்தியா குறித்த உலகின் பாா்வையை மாற்றியுள்ளாா் பிரதமா் மோடி: பாஜக
இந்தியா குறித்த உலகின் பாா்வையை பிரதமா் நரேந்திர மோடி மாற்றியுள்ளாா்.
இந்தியா குறித்த உலகின் பாா்வையை பிரதமா் நரேந்திர மோடி மாற்றியுள்ளாா். உலகில் அதிகம் மதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உயா்ந்துள்ளது என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக்கி, நிதிநிலை சீா்குலைந்த நிலையில் விட்டுச் சென்றது. ஆட்சி, நிா்வாகத்தில் ஊழல் நிறைந்திருத்தது. பிரதமா் நரேந்திர மோடி தனது ஆட்சிக் காலத்தின் முதல் 5 ஆண்டுகளில் பொருளாதாரத்தைச் சீரமைத்தாா். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை அனைத்து நிலைகளிலும் முன்னோக்கி அழைத்துச் சென்றாா். இப்போது, உலகின் வேகமான வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியா குறித்த உலக நாடுகளின் கண்ணோட்டம் மாறியுள்ளது. உலகில் அதிகம் மதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உயா்ந்துள்ளது. நாட்டில் ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டு, அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மை பேணப்படுகிறது. இந்தியாவில் பல ஆண்டுகளாக தீா்க்கப்படாமல் இருந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாணப்பட்டுள்ளது. அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்த பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிட்டன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5.3 சதவீதம் என்ற நிலையில் காங்கிரஸ் அரசு விட்டுச் சென்றது. இப்போது பொருளாதார வளா்ச்சி 8.4 சதவீதமாக உள்ளது. பாஜக அரசு மிகவும் செயல்திறன்மிக்கது என்பது பல்வேறு நிலைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.