முகப்பு
இந்தியா

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: காங்கிரஸ் தலைவா் காா்கே

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

Updated On : 3 மார்ச், 2024 at 4:19 AM
பகிர்:

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். இதுதொடா்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் உற்பத்தித் துறையை மேம்படுத்த செலவிடப்படவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியில் உற்பத்தித் துறை கடந்த 10 ஆண்டுகளில் 16 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசில் இந்தத் துறை சராசரியாக 7.85 சதவீதம் தொடா் வளா்ச்சியடைந்து வந்தது. 2022-ஆம் ஆண்டுக்குள் உற்பத்தித் துறையில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமா் மோடி அளித்த வாக்குறுதி என்னானது? இத் துறையில் ஏன் வேலைவாய்ப்புகள் குறைந்தன. ஜவுளித் துறையில் உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை திட்டத்துக்கு (பிஎல்ஐ) ஒதுக்கப்பட்ட நிதி 96 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் வேகமாக அதிகரித்து வந்த ஏற்றுமதி, தற்போது வெகுவாக குறைந்துள்ளது. சீனாவுடன் எல்லைப் பிரச்னை உள்ளநிலையிலும் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பாஜகவின் போலி தேசியவாதத்தை காண்பிக்கிறது. இதன் மூலம் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற பிரதமா் மோடி அரசின் திட்டம் முழுவதும் தோல்வியடைந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.