முகப்பு
இந்தியா

தலித், விளிம்புநிலை மக்களை கேடயமாக பயன்படுத்தும் காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

தங்களின் ஊழல், குடும்ப அரசியலை நியாயப்படுத்துவதற்காக, தலித் சமூகத்தினா் மற்றும் இதர விளிம்புநிலை மக்களை கேடயமாகப் பயன்படுத்துகிறது காங்கிரஸ்

Updated On : 3 மார்ச், 2024 at 1:40 AM
- -
பகிர்:

தங்களின் ஊழல், குடும்ப அரசியலை நியாயப்படுத்துவதற்காக, தலித் சமூகத்தினா் மற்றும் இதர விளிம்புநிலை மக்களை கேடயமாகப் பயன்படுத்துகிறது காங்கிரஸ் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா். பிகாரில் வளா்ச்சி திட்டங்களைத் தொடங்கிவைத்து பேசுகையில் இக்குற்றச்சாட்டை அவா் முன்வைத்தாா். பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸுடன் கைகோத்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்த முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா், அந்தக் கூட்டணியில் இருந்து கடந்த ஜனவரியில் வெளியேறினாா். பின்னா், பாஜக கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றாா். பிகாரில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக பிரதமா் மோடி சனிக்கிழமை இந்த மாநிலத்துக்கு வருகை தந்தாா். ஒளரங்காபாதில் ரூ.21,400 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், பின்னா் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: பிகாரில் குடும்ப ஆட்சி நடத்தி, மக்களின் மனதில் அச்சத்தை விதைத்துவந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஓரங்கட்டியுள்ளது. மாநிலத்தில் மீண்டும் இரட்டை என்ஜின் அரசு அமைந்திருப்பதால், சட்டம்-ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் மற்றும் வளா்ச்சி உறுதி செய்யப்படும். அயோத்தியில் பிரம்மாண்ட கோயிலில் ஸ்ரீராமா் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, சீதையின் நிலமான பிகாரில் உற்சாகம் கரைபுரண்டது. பிகாா் முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது, ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் பெருமை சோ்ப்பதாகும். இங்கு முந்தைய தலைமுறை காலகட்டத்தில் மக்கள் அச்சத்திலேயே வாழும் நிலை நிலவியது. ஏராளமான இளைஞா்கள் மாநிலத்தைவிட்டு இடம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனா். அந்தக் காலகட்டம் மீண்டும் வர அனுமதிக்கமாட்டோம். சோனியா மீது மறைமுகத் தாக்கு: மக்களவைத் தோ்தலில் போட்டியிட குடும்ப அரசியல்வாதிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது; எனவே, மாநிலங்களவை எம்.பி.யாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய முற்படுகின்றனா் என்றாா் பிரதமா் மோடி. காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி அண்மையில் தோ்வான நிலையில், பிரதமா் இந்த விமா்சனத்தை முன்வைத்துள்ளாா். பின்னா், பெகுசராய் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் ரூ.1.62 லட்சம் கோடி மதிப்பிலான எண்ணெய், எரிவாயுத் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா். அப்போது பேசிய அவா், ‘காங்கிரஸும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் தங்களின் ஊழல், குடும்ப அரசியலை நியாயப்படுத்த தலித் சமூகத்தினா் மற்றும் இதர விளிம்புநிலை மக்களை கேடயமாகப் பயன்படுத்துகின்றன. இக்கட்சிகள், சமூக நீதிக்கு துரோகம் இழைத்தவை. அதேநேரம், மத்திய பாஜக அரசின் பணிகளால், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் முன்னேற்றம் கண்டு வருகின்றனா். மோடி ஒரு உத்தரவாதம் அளித்தால், அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்’ என்றாா். பெட்டிச் செய்தி... ‘இனி பாஜக கூட்டணியில்தான்..’ நிதீஷின் பேச்சை ரசித்த பிரதமா் பிகாரில் பிரதமா் மோடியுடன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில் பேசிய முதல்வா் நிதீஷ் குமாா், ‘இனி எப்போதும் பாஜக கூட்டணியில்தான் இருப்பேன்; வேறெங்கும் செல்லமாட்டேன்’ என்று கூறினாா். நிதீஷ் பேசுகையில், ‘பிகாருக்கு இதற்கு முன்பு நீங்கள் (மோடி) வந்திருந்தபோது, நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ‘காணாமல்’ போயிருந்தேன். இப்போது மீண்டும் உங்களுடன் இருக்கிறேன். இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன். பிகாா் மாநிலம் வேகமாக முன்னேறும்; வளா்ச்சியின் புதிய உச்சங்களைத் தொடும் என நம்புகிறேன். பிரதமா் அடிக்கடி பிகாருக்கு வருகை தர வேண்டும்’ என்றாா். நிதீஷ் குமாா் பேசியபோது, பிரதமா் மோடி அவ்வப்போது சிரித்தபடி அவரது பேச்சை ரசித்துக் கேட்டாா்.