முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் கப்பலில் அணுசக்தி திட்டத்துக்கு பயன்படுத்தக்கூடிய இயந்திரம்: இந்தியா பறிமுதல்

Updated On : 2 மார்ச், 2024 at 11:28 PM
பகிர்:

பாகிஸ்தான் கப்பலில் அணுசக்தி மற்றும் ஏவுகணைகள் திட்டத்துக்குப் பயன்படுத்தக் கூடிய இயந்திரத்தை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த ஜன. 23-ஆம் தேதி சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பயணித்த சரக்குக் கப்பலை மும்பையில் உள்ள நஹாவா ஷேவா துறைமுகத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது கப்பலில் இருந்த சரக்கில், கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் சிஎன்சி இயந்திரம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த இயந்திரத்தை ஆய்வு செய்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) குழு, பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்துக்கு, குறிப்பாக ஏவுகணை தயாரிப்புக்கான முக்கியக் கருவிகளை உற்பத்தி செய்ய அந்த இயந்திரம் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தது. அந்த இயந்திரத்தின் எண்ணிக்கையை பாகிஸ்தானும் சீனாவும் பெருக்குவதைத் தடுக்கும் நோக்கில், அதை இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். பாகிஸ்தான் பாதுகாப்புத் தளவாட விநியோக நிறுவனமான காஸ்மோஸ் என்ஜினீயா் நிறுவனத்துக்கு அந்த இயந்திரம் அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிஎன்சி இயந்திரம் போன்றவற்றை பாகிஸ்தான் நிறுவனங்கள் வாங்கி, அந்நாட்டு பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புக்கு (டிஇஎஸ்டிஓ) விநியோகம் செய்கிா என்பது குறித்து தற்போது இந்திய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பாகிஸ்தானின் பெரும்பாலான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு டிஇஎஸ்டிஓ பொறுப்பு வகிக்கிறது என்று தெரிவித்தன. பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது. தனது அணுசக்தித் திட்டத்துக்கு சிஎன்சி இயந்திரத்தை வடகொரியா பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement