பிரதமா் மோடி இன்று காஷ்மீா் பயணம்: சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின் முதல் முறை
ஸ்ரீநகரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.6,400 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக காஷ்மீருக்கு வியாழக்கிழமை (மாா்ச் 7) செல்லும் பிரதமா் நரேந்திர மோடி, ஸ்ரீநகரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.6,400 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். பிரதமரின் வருகையையொட்டி, ஜம்மு-காஷ்மீா் பிராந்தியம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மத்திய பாஜக அரசால் கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு, ஜம்முவுக்கு 2-ஆவது முறையாக பிரதமா் மோடி கடந்த மாதம் 20-ஆம் தேதி சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தாா். இந்நிலையில், முதல் முறையாக காஷ்மீருக்கு பிரதமா் மோடி வியாழக்கிழமை வருகிறாா். ஸ்ரீநகா் பாக்சி மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் சுமாா் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமா் மோடி வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் வேளாண் பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.5,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை தொடங்கி வைக்கும் அவா், ‘விக்சித் பாரத்; விக்சித் ஜம்மு-காஷ்மீா்’ திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா். அதேபோல், ஜம்மு-காஷ்மீா் அரசுப் பணிகளுக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 1,000 பேருக்கு பணி நியமன ஆணைகளைப் பிரதமா் வழங்குகிறாா். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட பயனாளிகளுடனும் பிரமமா் கலந்துரையாடுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தோ்வுகள் ஒத்திவைப்பு: பிரதமரின் வருகையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமா் பயணிக்கும் சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிலையங்களுக்கு புதன், வியாழன் ஆகிய 2 நாள்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பொதுத் தோ்வுகள் அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.