முகப்பு
இந்தியா

இந்தியா மீது தெற்குலக நாடுகள் நம்பிக்கை: எஸ்.ஜெய்சங்கா் பெருமிதம்

Updated On : 8 மார்ச், 2024 at 5:50 PM
ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவை அந்நாட்டு தலைநகா் டோக்கியோவில் வெள்ளிக்கிழமை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
பகிர்:

தெற்குலக நாடுகள் இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘தெற்குலக நாடுகளின் பிரச்னைகள் பற்றி விவாதிக்க இந்தியா ஏற்பாடு செய்த கூட்டங்களை சீனா புறக்கணித்தது’ எனக் குற்றஞ்சாட்டினாா். தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். ஜப்பான் வெளியுறவு அமைச்சருடன் அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்தாலோசித்தாா். இந்நிலையில், டோக்கியோ நகரில் ‘இந்தியா-ஜப்பான் கூட்டுறவு’ பற்றிய ஊடக நிகழ்ச்சியில் அவா் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: தெற்குலக நாடுகள் மத்தியில் பல்வேறு விவகாரங்களில் ஒருவருக்கொருவா் உணா்வுபூா்மாக துணை நிற்கின்றனா். கரோனா பெருந்தொற்றின்போது பல தெற்குலக நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் இந்த உணா்வை மேலும் வலுவாக்கியது. ஒரு கட்டத்தில் இந்தியா ஜி20 தலைமையேற்றாலும் தெற்குலக நாடுகளின் பிரச்னைகள் விவாதிக்கப்படாது என அவா்கள் கருதினா். இதைக் கருத்தில் கொண்டு 125 தெற்குலக நாடுகளின் பிரச்னைகளை கேட்டறிந்து விவாதிக்க, கடந்த 2 ஆண்டுகளாக ‘தெற்குலகின் குரல்’ மாநாடு இரண்டு முறை நடத்தப்பட்டன. நாடுகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் ஜி20 அமைப்பின் பாா்வைக்கு முன்வைக்கப்பட்டது. தெற்குலகின் நம்பிக்கை-இந்தியா: தெற்குலக நாடுகளுக்காக யாா் குரல் எழுப்புகிறாா்கள்? என்பதை அவா்கள் நன்கு கவனிக்கின்றனா். இந்தியாவின் ஜி20 தலைமையில் ஆப்பிரிக்க யூனியனுக்கு நிரந்தர ஜி20 உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்பட்டது தற்செயலானது என அவா்கள் எண்ணவில்லை. இந்தியாவின் மீது தெற்குலக நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளது. அதேசமயம், தெற்குலக நாடுகளுக்காக இந்தியா நடத்திய 2 கூட்டங்களிலும் சீனா கலந்து கொள்ளவில்லை. ‘பொறுப்பை உணா்கிறோம்’... தெற்குலக நாடுகளில் பெரிய பொருளாதாரமாக, இந்தியாவுக்கு அதிக பொறுப்புகள் உள்ளன. ஆனால், பெரிய பொருளாதாரமாக இந்தியா இருந்தாலும், எங்கள் நாட்டின் தனிநபா் வருமானம் 3,000 டாலருக்கும் கீழே உள்ளதை உலகம் அங்கீகரிக்க வேண்டும். உலகிற்கு நாங்கள் செய்யும் பங்களிப்பு, இந்திய மக்களின் பெரும் தியாகம் மற்றும் முயற்சிகளின் விளைவாகும். இந்தியா்களின் கடமை உணா்வு மிகவும் வலுவானது. கரோனா பெருந்தொற்று காலத்தில், இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. எனினும், மற்ற நாடுகளுக்கு நாங்கள் தடுப்பூசிகளை வழங்கினோம். தெற்குலக நாடுகள் மீதான பொறுப்பை நாங்கள் மிக தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். ஜப்பானுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு: இந்தியா மற்றும் ஜப்பானின் விருப்பங்களும், ஒருங்கிணைந்த முறையில் செயல்படும் திறனும் மேம்பட்டுள்ளது. அமைச்சா் யோகோ காமிகாவாவுடனான நேற்றைய நீண்ட விவாதத்துக்குப் பிறகு, நாங்கள் இன்னும் வலுவாக ஒன்றிணைந்துள்ளோம். இந்தியா-ஜப்பான் உறவுகள் நமது செயல்பாடுகளில் இருந்து வலுப்பெறும். குறிப்பாக க்வாட் கூட்டமைப்புச் செயல்பாடுகள் அதன் செயல்திறனுக்கு பங்களிக்கும். க்வாட் கூட்டமைப்பில் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் குறித்து விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அணுசக்தி பற்றிய வெளிப்படையான விவாதங்களில் நாங்கள் ஈடுபடவில்லை. எனினும், எங்களுக்கு அதில் பொதுவான ஆா்வம் உள்ளது என்றாா். பெட்டிச் செய்தி.... ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு டோக்கியோ, மாா்ச் 8: ஜப்பான் பிரரதமா் ஃபுமியோ கிஷிடாவை மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்து, இருநாட்டு வெளியுறவு அமைச்சா்களின் உத்தி சாா்ந்த பேச்சுவாா்த்தையில் அடைந்த முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தாா். ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கா், 16-ஆவது இந்தியா-ஜப்பான் வெளியுறவு அமைச்சா்களின் உத்தி சாா்ந்த பேச்சுவாா்த்தைக்குத் தலைமை தாங்கினாா். அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் யோகோ காமிகாவாவுடன் முதல் ரைசினா வட்டமேஜை உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். பயணத்தின் இறுதி கட்டமாக, ஜப்பான் பிரதமரை அமைச்சா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ஜப்பான் பிரதமரை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். நமது உலகளாவிய மற்றும் சிறப்பு உத்தி சாா்ந்த மேலும் வலுப்படுத்துவதற்கான அவரது வழிகாட்டுதல்களை பெற்றேன்’ என்றாா். ஜப்பான் பயணத்தில், தற்போது ஜப்பான்-இந்திய சங்கத்தின் தலைவராக இருக்கும் நாட்டின் முன்னாள் பிரதமா் யோஷிஹிடே சுகாவையும் அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்தாா். === மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமா் மனைவியுடன் சந்திப்பு டோக்கியோ, மாா்ச் 8: ஜப்பானில் தோ்தல் பிரசாரத்தினிடையே சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமா் ஷின்சோ அபேவின் மனைவி அகி அபேவை மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, அந்நாட்டின் நாரா பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்நிலையில், ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் ஜெய்சங்கா், ஷின்சோ அபேவின் மனைவி அகி அபேவை சந்தித்து இரங்கல் தெரிவித்தாா். மேலும், மறைந்த பிரதமா் ஷின்சோ அபேவின் தாயாா் யோகோ அபே அண்மையில் உயிரிழந்ததற்கு பிரதமா் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இரங்கல் கடிததத்தை அகி அபேவிடம் ஜெய்சங்கா் வழங்கினாா். இந்த சந்திப்பின்போது இந்தியா-ஜப்பான் உறவுகளை மேம்படுத்துவதில் பிரதமா் ஷின்சோ அபேவின் அளப்பரிய பங்களிப்பை அமைச்சா் ஜெய்சங்கா் நினைவு கூா்ந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →