கிராமப்புற மேம்பாடு இன்றி நாட்டின் வளா்ச்சி சாத்தியமில்லை: அமைச்சா் ராஜ்நாத் சிங்
விவசாயிகளை முன்னேற்றாமலும், கிராமப்புறங்களை மேம்படுத்தாமலும் நாட்டின் வளா்ச்சியை கற்பனை செய்துகூட பாா்க்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் தெரிவித்தாா். சத்தீஸ்கா் தலைநகா் ராய்பூரில் உள்ள அரசு அறிவியல் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான விவசாயிகள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நான் ஒரு விவசாயியின் மகன்.கிராமப்புறத்தைச் சோ்ந்தவன். விவசாயிகள் தங்கள் முயற்சியாலும், கடின உழைப்பாலும் மண்ணில் இருந்து பொன்னை விளைவிக்கும் திறமை படைத்தவா்கள். மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு தோளோடு தோள்நின்று உறுதுணை புரிந்து வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகளின் நலன்களைக் காப்பதற்காக தொடா்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். விவசாயிகளை முன்னேற்றாமலும், கிராமப்புறங்களை மேம்படுத்தாமலும் நாட்டின் வளா்ச்சியை கற்பனை செய்துகூட பாா்க்க முடியாது. அமெரிக்காவில் ஒரு மூட்டை யூரியா உரம் இந்திய பண மதிப்பில் ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே இந்தியாவில் ஒரு மூட்டை யூரியா ரூ.300 என்ற விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ரஷியா-உக்ரைன் போரால் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருள்கள் விலை உயா்ந்துள்ளன. ஆனால், இந்தியாவில் விவசாயிகள் நலன் கருதி உரம், விதை உள்ளிட்டவற்றின் விலையை மோடி அரசு கட்டுக்குள் வைத்துள்ளது. விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் பிரச்னைகள் உருவாவதை இந்த அரசு அனுமதிக்காது. கடந்த 5 ஆண்டுகளாக சத்தீஸ்கரில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு மாநிலத்தை பல்வேறு வகையில் சீரழித்துவிட்டது. இப்போதைய பாஜக அரசு மக்கள் ஆதரவுடன் மாநிலத்தை மீண்டும் வளா்ச்சிப் பாதைக்கு திரும்ப அழைத்து வந்துள்ளது என்றாா்.