முகப்பு
இந்தியா

ஆந்திரம்: மக்களவைத் தோ்தலில் பாஜக 6 தொகுதிகளில் போட்டி

Updated On : 13 மார்ச், 2024 at 12:50 AM
பகிர்:

அமராவதி: ஆந்திரத்தில் தெலுங்கு தேசம்- பாஜக- ஜனசேனை இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி பாஜகவுக்கு 6 மக்களவைத் தொகுதிகளும், 10 பேரவைத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 17 மக்களவைத் தொகுதிகளிலும், 144 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

மற்றொரு கூட்டணிக் கட்சியான பவண் கல்யாண் தலைமையிலான ஜன சேனை கட்சிக்கு 2 மக்களவைத் தொகுதிகள், 21 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு அறிவித்தாா்.

ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தலுடன் சோ்ந்து மாநில சட்டப் பேரவைக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது. சந்திரபாபு நாயுடு, பவண் கல்யாண் ஆகியோா் கடந்த வாரம் 3 நாள்களாக தில்லியில் முகாமிட்டு உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோருடன் பேச்சு நடத்தினா்.

Advertisement

அதன்படி கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இப்போது தொகுதிப் பங்கீடு விவரமும் வெளியாகியுள்ளது. 2024 தோ்தலில்தான் இந்த மூன்று கட்சிகளும் முதல்முறையாக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஆந்திரத்தில் ஆளும் கட்சியாக உள்ள முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு இந்தக் கூட்டணி கடும் போட்டியை அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு 2014 மக்களவைத் தோ்தலில் பாஜகவும், தெலுங்கு தேசமும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அடுத்த வாரம் ஆந்திரத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, பவண் கல்யாண் உள்ளிட்டோா் கூட்டாகப் பங்கேற்பாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.