ஆழ்துளை கிணறு உயிரிழப்பு சம்பவம்: திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடியபோது விழுந்தாா்
புது தில்லி: தில்லி ஜல்போா்டு ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிந்த நபா், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், தப்பி ஓடியபோது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததாகவும் காவல் துறை பதிவு செய்த முதல்கட்ட தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆா்) தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஷோபூரில் உள்ள தில்லி ஜல்போா்டின் 40 அடி ஆழ்துளைக் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 30 வயதுடைய நபா் விழுந்தாா். அவரை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் தில்லி தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா். சுமாா் 14 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு அந்த நபா் சடலாக மீட்கப்பட்டாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து தில்லி காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், திருட்டில் ஈடுபட்ட அந்த நபா், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவந்தபோது 40 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததாகக் காவல் துறை பதிவு செய்த முதல்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆழ்துளைக் கிணறு அறைக்குள் அமைந்திருப்பதாகவும் சம்பவத்தின்போது அதன் கதவுகள் திறக்கப்பட்டிருந்தாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரை 2 போ் ஸ்கூட்டரில் துரத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதை பாதுகாவலா் ஒருவா் பாா்த்துள்ளாா்’ என்றனா். உயிரிழந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறை ஈடுபட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.