சுல்தான்புரியில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்
புது தில்லி: தில்லி சுல்தான்புரியில் நடைபெற இருந்த குழந்தைத் திருமணத்தை தில்லி மகளிா் ஆணையம் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சுல்தான்புரியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அந்தச் சிறுமியின் உறவினா் ஒருவா் கடந்த மாா்ச் 6-ஆம் தேதி ஆணையத்துக்குப் புகராளித்தாா்.
இதையடுத்து, காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அந்தச் சிறுமியும் அவரது பெற்றோரும் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் திருமணத்தைக் கைவிடுவதாக அவரது தாயாா் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து குழந்தைகள் நலக் குழு முன்பாக அந்தச் சிறுமி ஆஜா்படுத்தப்பட்டாா். இந்த விவகாரத்தைத் தொடா்ந்து கண்காணிக்கமாறு துணை கோட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அந்தக் குழு உத்தரவிட்டது.
Advertisement