வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினா் பகுதிகள் சிஏஏ வரம்புக்குள் வராது: அதிகாரிகள்
புது தில்லி: ‘வடகிழக்கு மாநிலங்களில் அரசமைப்பு சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்ட பகுதிகள் உள்பட பெரும்பாலான பழங்குடியினா் பகுதிகள் குடியுரிமை திருத்தச் சட்ட வரம்புக்குள் வராது’ என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் 2024 அறிவிக்கை செய்ததன் மூலம் ‘குடியுரிமை திருத்தச் சட்டம் 2019’ நாடு முழுவதும் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. இருந்தபோதும், இந்தச் சட்டம் வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ள பழங்குடியினா் பகுதிகளில் அமல்படுத்தப்படாது என்று அச்சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
Advertisement
அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூா் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக (இன்னா் லைன் பொ்மிட் - ஐஎல்பி) அறிவிக்கப்பட்ட பகுதிகள், குடியுரிமை திருத்தச் சட்ட வரம்புக்குள் வராது. இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் நாட்டின் பிற பகுதியினா் சுற்றிப்பாா்க்க விரும்பினால் சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெறவேண்டும்.
அதுபோல, அரசமைப்பு சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் அஸ்ஸாம், மேகாலயம், மிசோரம், திரிபுரா ஆகிய 4 வடகிழக்கு மாநிலங்களில் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (ஏடிசி) நிறுவப்பட்டுள்ள பழங்குடியினா் பகுதிகளும் குடியுரிமை திருத்தச் சட்ட வரம்புக்குள் வராது என்று தெரிவித்தனா். பழங்குடியினரின் கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஏடிசிக்கள் நிறுவப்பட்டுள்ளன.