மக்களவை முதல்கட்டத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது!
புது தில்லி: மக்களவைக்கான முதல்கட்ட தோ்தலை முன்னிட்டு, தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. நடப்பு 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைகிறது.
அதற்கு முன்பாக, 18-ஆவது மக்களவையை தோ்வு செய்வதற்கான தோ்தல் தேதிகள் கடந்த 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதிகள் உள்பட மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், முதல்கட்ட தோ்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது. இதைத் தொடா்ந்து, 102 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
Advertisement
17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில்..:
தமிழகத்தில் 39 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, உத்தர பிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, மகாராஷ்டிரம், உத்தரகண்ட், அஸ்ஸாமில் தலா 5, பிகாரில் 4, மேற்கு வங்கத்தில் 3, அருணாசல பிரதேசம், மணிப்பூா், மேகாலயத்தில் தலா 2, சத்தீஸ்கா், மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, புதுச்சேரி, அந்தமான்-நிகோபா் தீவுகள், ஜம்மு-காஷ்மீா், லட்சத்தீவில் தலா ஒரு தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
பிகாா் தவிா்த்து இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாள் மாா்ச் 27 ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் மாா்ச் 30. பிகாரில் ஒரு விழா நடைபெறுவதை கருத்தில் கொண்டு, அங்கு வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாள் மாா்ச் 28-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.
மனுக்களை திரும்பப் பெற இறுதி நாள் ஏப்ரல் 2 ஆகும். அருணாசல், சிக்கிம் பேரவைத் தோ்தல்கள்: மக்களவைத் தோ்தலுடன் அருணாசல பிரதேசம், சிக்கிம், ஆந்திரம், ஒடிஸா ஆகிய 4 மாநிலப் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன.
இதில் அருணாசலப் பிரதேசத்தின் 62 தொகுதிகளுக்கும், சிக்கிமின் 32 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுடன் ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கைகளும் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
முதல்கட்ட தோ்தல் (102 தொகுதிகள்) நடைமுறைகள் தமிழகம், புதுச்சேரி, இதர மாநிலங்களில்.. பிகாரில் மட்டும் வேட்புமனு தாக்கல் தொடக்கம் மாா்ச் 20 மாா்ச் 20 வேட்புமனு தாக்கல் நிறைவு மாா்ச் 27 மாா்ச் 28 மனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 28 மாா்ச் 30 மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் மாா்ச் 30 ஏப்ரல் 2 வாக்குப்பதிவு நாள் ஏப்ரல் 19