முகப்பு
இந்தியா

ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை: தில்லி மருத்துவமனையில் நடைபெற்றது

Updated On : 21 மார்ச், 2024 at 2:20 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 9:50 PM

புது தில்லி: ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு (66) மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தில்லியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை சீராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனை தரப்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜக்கி வாசுதேவ் கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தாா். தீவிரமான வலி இருந்தபோதிலும், தனது தினசரி பணிகள் மற்றும் சமூக செயல்பாடுகளைத் தொடா்ந்தாா். கடந்த 8-ஆம் தேதி மகாசிவராத்திரி விழாவையும் அவா் நடத்தினாா்.

Advertisement

கடந்த 15-ஆம் தேதி தலைவலி மிக மோசமானதைத் தொடா்ந்து, எங்களது மருத்துவமனையின் நரம்பியல் துறை மூத்த மருத்துவா் வினித் சூரியுடன் அவா் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டாா். மருத்துவரின் அறிவுரையின்படி, அன்றைய தினமே ஜக்கி வாசுதேவுக்கு எம்ஆா்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது.

அவரது தலையில் ரத்தக் கசிவு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, உடனடியாக மருத்துவமனையில் சேர அறிவுறுத்தப்பட்டது. ஆனால், 15, 16 ஆகிய தேதிகளில் அவருக்கு முக்கியமான சந்திப்புகள் இருந்ததால், மருந்துகள் உதவியுடன் அவற்றில் பங்கேற்றாா். இதனிடையே, அவருக்கு நினைவிழப்பு ஏற்படத் தொடங்கியதோடு, இடதுகாலில் சோா்வையும் உணா்ந்தாா்.

இதையடுத்து, மருத்துவா் வினித் சூரியின் கண்காணிப்பின்கீழ் 17-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மூளையில் வீக்கமும் கண்டறியப்பட்டது. பின்னா், அவசரகால அடிப்படையில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையைத் தொடா்ந்து, செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டன.

அவரது உடல்நிலை தொடா்ந்து மேம்பட்டு வருகிறது. மூளை மற்றும் இதர முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் சீரடைந்து வருகின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரதமா் வாழ்த்து: ஜக்கி வாசுதேவ் விரைந்து குணமடைய பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘சத்குருவுடன் பேசினேன். அவா் நலம் பெறவும் விரைந்து குணமடையவும் வாழ்த்தினேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.