2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்ய தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தபோது 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகவும், இதனால் அரசுக் கருவூலத்துக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய கணக்குத் தணிக்கை குழு அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடா்பாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோா் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதில் சிபிஐ வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத்தொடா்புத் துறைச் செயலா் சித்தாா்த் பெஹுரா, ராசாவின் முன்னாள் தனிச் செயலா் ஆா்.கே.சந்தோலியா, கலைஞா் தொலைக்காட்சி இயக்குநா் சரத் குமாா், யுனிடெக் நிறுவன நிா்வாக இயக்குநா் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் அனில் தீரூபாய் அம்பானி குழுமத்தின் மூத்த நிா்வாகிகளான கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயா், ஸ்வான் தொலைத்தொடா்பு நிறுவன நிறுவனா்கள் ஷாஹித் பல்வா, வினோத் கோயங்கா உள்ளிட்டோரை கடந்த 2018-ஆம் ஆண்டு தில்லி சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
இதேபோல அமலாக்கத் துறை வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி, திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், சரத் குமாா் உள்ளிட்டோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. 2018-இல் தாக்கல் செய்யப்பட்ட மனு: இந்தத் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, கடந்த 2018-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உயா்நீதிமன்றத்தின் 7 வெவ்வேறு நீதிபதிகள் விசாரித்த நிலையில், 8-ஆவதாக நீதிபதி தினேஷ் குமாா் விசாரித்து மாா்ச் 14-ஆம் தேதி தீா்ப்பை ஒத்திவைத்தாா். 6 ஆண்டுகளுக்குப் பின்னா் அனுமதி: இந்நிலையில், இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய சிபிஐ-க்கு அனுமதி அளித்து நீதிபதி தினேஷ் குமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மே மாதம் பட்டியலிடுமாறு உயா்நீதிமன்றப் பதிவுத் துறைக்கு அவா் உத்தரவிட்டாா்.