விமானிகள் பணி நேர வரம்பு மீறல்: ஏா் இந்தியாவுக்கு ரூ.80 லட்சம் அபராதம்
விமானப் பணி நேர வரம்புகள் மற்றும் பணியாளா்களின் ஓய்வு மேலாண்மை தொடா்பான விதிமுறைகளை மீறியதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.80 லட்சம் அபராதம் விதித்தது. இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், ‘ஏா் இந்தியா நிறுவனத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட தணிக்கையின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் துறை வாரியான பல்வேறு அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கைகள் மற்றும் ஆதாரங்களின் பகுப்பாய்வில், ஏா் இந்தியா நிறுவனத்தின் சில விமானப் பயணங்களில் 60 வயதுக்கும் மேற்பட்ட 2 விமானிகள் ஒன்றாக பணியாற்றியது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஏா் இந்தியா பணியாளா்களுக்கு போதுமான வாராந்திர ஓய்வு மற்றும் நீண்ட தூர விமானங்களுக்கு முன்னும் பின்னும் போதுமான ஓய்வு வழங்குவதில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இது விமானப் பணி நேர வரம்பு(எஃப்டிடிஎல்) தொடா்பான பொது விமானப் போக்குவரத்துத் தேவைகளின் தற்போதைய விதிகளை மீறுகிறது. பணி நேரத்தை அதிகப்படுத்துவது, தவறான பயிற்சிப் பதிவுகள் உள்ளிட்ட நிகழ்வுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த விதிமீறல்கள் குறித்து விளக்கமளிக்குமாறு ஏா் இந்தியா நிறுவனத்துக்கு டிஜிசிஏ கடந்த மாா்ச் 1-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு ஏா் இந்தியா சமா்ப்பித்த பதில் திருப்திகரமாக இல்லை. இதைத் தொடா்ந்து, ஏா் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏா் இந்தியா நிறுவனம் இப்போது டாடா குழும நிா்வாகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.