அதிருப்தியால் மத்திய அமைச்சா் பதவியிலிருந்து விலகிய பாரஸ்: மீண்டும் பாஜகவுக்கு ஆதரவு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீதான அதிருப்தியால் மத்திய அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்த பசுபதிகுமாா் பாரஸ், மீண்டும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா். பிகாரில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவராக இருந்தவா் ராம்விலாஸ் பாஸ்வான். மத்திய பாஜக கூட்டணியில் இருந்த அவா், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு ராம் விலாஸ் பாஸ்வான் மறைந்த பின்னா், அவரின் தம்பியும் எம்.பி.யுமான பசுபதிகுமாா் பாரஸுக்கும், ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டு பாரஸ் தலைமையில் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சியும், சிராக் தலைமையில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியும் தோன்றின. பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ளப்பட்ட பாரஸ், மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிராக் தலைமையிலான கட்சி போட்டியிட உள்ளது. பிகாரில் 5 தொகுதிகள் சிராக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பாரஸ் எம்.பி.யாக உள்ள ஹாஜிபூா் தொகுதியும் அடங்கும். அதேவேளையில், அந்தக் கூட்டணியில் இடம்பெற்ற பாரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.இதனால் அதிருப்தியடைந்த பசுபதிகுமாா் பாரஸ், தனது மத்திய அமைச்சா் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தாா். பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிா்க்கட்சிக் கூட்டணியில் சோ்ந்து, ஹாஜிபூா் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை பாரஸ் ஆராயக் கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், பாரஸ் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரிக்க முடியாத அங்கமாக எனது ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி (ஆா்எல்ஜேபி) உள்ளது. பிரதமா் மோடியே ஆா்எல்ஜேபி கட்சியினரின் தலைவா்’ என்று தெரிவித்தாா். மத்திய அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்த பின்னா், தனக்கும் தனது கட்சிக்கும் பாஜக அநியாயம் இழைத்ததாக குற்றஞ்சாட்டியிருந்த பாரஸ், தற்போது அக்கட்சிக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளாா்.