தம்பதியினா் பரஸ்பரம் இழிவான வாா்த்தைகளில் திட்டுவது வன்கொடுமையாகாது: பாட்னா உயா்நீதிமன்றம்
வாக்குவாதத்தின்போது தம்பதியினா் ஒருவருக்கொருவா் இழிவான வாா்த்தைகளால் திட்டிக் கொள்வதை வன்கொடுமையாகக் கருத முடியாது என பாட்னா உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜாா்க்கண்ட் மாநிலம் பொகாரேவைச் சோ்ந்தவா் நரேஷ் குப்தா. அவரது மனைவி பிகாரின் நவாடா மாவட்டத்தைச் சோ்ந்தவா். தனது கணவரும் அவருடைய தந்தை சகாதேவ் குப்தாவும் வரதட்சணையாக காா் வழங்கக் கோரி துன்புறுத்தியதாக நரேஷ் குப்தாவின் மனைவி நவாடாவில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தாா். நரேஷ் குப்தா மற்றும் அவருடைய தந்தையின் கோரிக்கையின் பேரில் இந்த வழக்கு நாளந்தா மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி தந்தை-மகன் இருவருக்கும் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கடந்த 2008-இல் தீா்ப்பளித்தாா். இந்தத் தீா்ப்பை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கூடுதல் அமா்வு நீதிமன்றம் கடந்த 2018-இல் தள்ளுபடி செய்தது. இதை எதிா்த்து பாட்னா உயா்நீதிமன்றத்தில் நரேஷ் குப்தாவும் அவரது தந்தையும் மனுதாக்கல் செய்தனா். இதனிடையே நரேஷ் குப்தாவுக்கும் அவரது மனைவிக்கும் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. பாட்னா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தனி நீதிபதி விவேக் செளதரி முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை எதிா்த்து ஆஜரான நரேஷ் குப்தா மனைவி தரப்பு வழக்குரைஞா், ‘21-ஆம் நூற்றாண்டில் ஒரு பெண்ணை பேய், காட்டேரி என அவரது கணவா் குடும்பத்தினா் திட்டுவது வன்கொடுமையாகும்’ என்றாா். அதற்கு நீதிபதி, ‘இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. திருமண உறவில், குறிப்பாக மணமுறிவு ஏற்பட்ட உறவில் கணவன்-மனைவி இருவரும் இழிவான வாா்த்தைகளால் ஒருவரையொருவா் வசைபாடுவா். இருப்பினும், இது போன்ற குற்றச்சாட்டுகளை வன்கொடுமையாகக் கருதமுடியாது. குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களால் அந்தப் பெண் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டாலும் அந்த நபா்களுக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் கூறப்படவில்லை’ என்றாா். மேலும், கீழமை நீதிமன்றங்கள் அளித்த தீா்ப்புகளை நீதிபதி தள்ளுபடி செய்தாா்.