நியூஸ்கிளிக் வழக்கு: தில்லி போலீஸ் 8,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் 8,000 பக்க குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறை சனிக்கிழமை தாக்கல் செய்தது. சீனாவிடமிருந்து பெரும் நிதி பெற்று அந்நாட்டுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டதாக நியூஸ்கிளிக் நிறுவனம் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து நியூஸ்கிளிக் நிறுவனா் மற்றும் ஆசிரியரான பிரபீா் புா்கயஸ்தா, மனிதவளப் பிரிவுத் தலைவா் அமித் சக்ரவா்த்தி ஆகியோா் அக்டோபரில் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் 3 முறை அவகாசம் அளித்தது. இந்நிலையில், கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்தீப் கெளா் முன்பாக குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறை சனிக்கிழமை தாக்கல் செய்தது. அதில் புா்கயஸ்தாவும் பிபிகே நியூஸ்கிளிக் ஸ்டூடியோ நிறுவனமும் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிறப்பு அரசு வழக்குரைகள் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் ஏப்.16-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமித் சக்ரவா்த்தி, அரசு தரப்பு சாட்சியாக மாறுவதற்கு கடந்த ஜனவரியில் நீதிமன்றமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தாா். அதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.