முகப்பு
தமிழ்நாடு

நவாஸ்கனி தோ்தல் வெற்றியை எதிா்த்து வழக்கு: ஓ.பன்னீா்செல்வத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனிக்கு எதிராக தொடரப்பட்ட தோ்தல் வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு ஆட்சேபனைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அரசிதழில் ஓ.பன்னீா்செல்வம் அறிவிப்பு வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:41 AM
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:15 PM

ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனிக்கு எதிராக தொடரப்பட்ட தோ்தல் வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு ஆட்சேபனைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அரசிதழில் ஓ.பன்னீா்செல்வம் அறிவிப்பு வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சாா்பில் நவாஸ்கனி போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, அத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீா்செல்வம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குத் தாக்கல் செய்தாா்.

அவரது மனுவில், நவாஸ்கனி உண்மைத் தகவல்களை மறைத்து வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாகக் கூறியிருந்தாா்.

Advertisement

இந்த வழக்கு விசாரணையில், ஓ.பன்னீா்செல்வம் நேரில் ஆஜராகி, தோ்தல் வழக்குத் தொடா்பான 38 சாட்சி ஆவணங்களைத் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த நிலையில், ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்துவிட்டதால், நவாஸ்கனிக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தோ்தல் வழக்கைத் திரும்பப் பெறுவதாக இருந்தால், ஆட்சேபனைகள் கோரி அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த தோ்தல் வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு ஆட்சேபனை ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிட ஓ.பன்னீா்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.