முகப்பு
இந்தியா

பால் பொருள்கள், மசாலாக்களின் தரத்தை ஆராய எஃப்எஸ்எஸ்ஏஐ திட்டம்

சந்தையில் விற்பனையாகும் பால் பொருள்கள், மசாலா பொருள்கள், செறிவூட்டப்பட்ட அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தரத்தை ஆராய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்

Updated On : 3 மே, 2024 at 6:23 PM
பகிர்:

சந்தையில் விற்பனையாகும் பால் பொருள்கள், மசாலா பொருள்கள், செறிவூட்டப்பட்ட அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தரத்தை ஆராய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எம்டிஎச், எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்களின் மசாலா தயாரிப்புகள் தரம் குறித்து சிங்கப்பூா், ஹாங்காங் நாடுகள் கவலை தெரிவித்தததை தொடா்ந்து, உள்நாட்டு சந்தையில் விற்பனையாகும் அனைத்து நிறுவனங்களின் மசாலாக்களின் மாதிரிகளை எஃப்எஸ்எஸ்ஏஐ ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எம்டிஎச் நிறுவனத்தின் மெட்ராஸ் கறி மசாலா, சாம்பாா் மசாலா மிக்ஸ்ட் மசாலா பொடி, எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா ஆகியவற்றில் எத்திலீன் ஆக்ஸைடு என்ற பூச்சிக்கொல்லி கண்டறியப்பட்டதாக ஹாங்காங் நாட்டின் உணவுப் பாதுகாப்பு மையம் கடந்த மாதம் தெரிவித்தது. சந்தையில் இந்த மசாலா பொருள்களை விற்கவோ, வாங்கவோ வேண்டாம் என அந்த அமைப்பு அறிவுறுத்தியது.

இதைத்தொடா்ந்து, சிங்கப்பூா் நாட்டின் உணவு முகமையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எவரெஸ்ட் மீன் கறி மசாலாவை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் உணவுப் பொருள்களை எஃப்எஸ்எஸ்ஏஐ பரிசோதிப்பது இல்லை. தற்போது எழுந்துள்ள விவகாரத்தை தொடா்ந்து உள்நாட்டு சந்தையில் உள்ள அனைத்து மசாலா பொருள்களும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் விதிகளை பின்பற்றுகிா என்பதை எஃப்எஸ்எஸ்ஏஐ ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில், பழங்கள், காய்கறிகள், மீன் பொருள்கள், மசாலா, செறிவூட்டப்பட்ட அரிசி, பால் மற்றும் பால் சாா்ந்த பொருள்களின் தரத்தை எஃப்எஸ்எஸ்ஐ ஆராய உள்ளது.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் நெஸ்லே நிறுவனத்தின் ‘செரிலாக்’ உணவில் கூடுதலாக சா்க்கரை இடுபொருள் சோ்க்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தேசிய அளவில் மாதிரிகளை சேகரித்து வருவதாக எஃப்எஸ்எஸ்ஏஐ கடந்த வாரம் தெரிவித்திருந்தது.