முகப்பு
இந்தியா

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டு வெள்ளிக்கிழமையுடன் (மே 3) ஓராண்டு நிறைவு

Updated On : 4 மே, 2024 at 2:55 AM
பகிர்:

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டு வெள்ளிக்கிழமையுடன் (மே 3) ஓராண்டு நிறைவு பெற்றது.

ஓராண்டு கடந்துவிட்ட போதிலும், மாநிலத்தில் ‘பிளவு’ இன்னும் மறையவில்லை. இரு சமூகத்தினரும் அவ்வப்போது மோதிக் கொள்வதால் முழு அமைதி திரும்பவில்லை.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் மக்கள்தொகையில் மைதேயி சமூகத்தினா் பெரும்பான்மையாக (53%) உள்ளனா். குகி மற்றும் நாகா பழங்குடியினரின் மக்கள்தொகை சுமாா் 40 சதவீதமாகும்.

மாநிலத்தின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினரும், மலை மாவட்டங்களில் பழங்குடியினரும் அதிகம் வசிக்கின்றனா். மைதேயி சமூகத்தினரில் பெரும்பாலானோா் ஹிந்துக்கள்; குகி பழங்குடியினரில் பெரும்பாலானோா் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனா்.

கலவரத்துக்கு வித்திட்ட உத்தரவு: மணிப்பூரில் பழங்குடியினருக்கு சில சிறப்பு உரிமைகள் உள்ள சூழலில், தங்களை பழங்குடியினப் பட்டியலில் சோ்க்க வேண்டுமென மைதேயி சமூகத்தினா் நீண்ட காலமாக கோரி வருகின்றனா். இந்த விவகாரம் தொடா்பான வழக்கை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் விசாரித்த மணிப்பூா் உயா்நீதிமன்றம், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவது குறித்து 4 வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மாநில பாஜக அரசுக்கு உத்தரவிட்டது.

‘மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது’ என்ற நிலைப்பாட்டை கொண்ட குகி பழங்குடியினா், உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து தீவிர போராட்டங்களில் இறங்கினா்.

போா்க்களமான மணிப்பூா்: மலை மாவட்டங்களில் கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி பழங்குடியின அமைப்பினா் பெரிய அளவில் போராட்டம் நடத்தியபோது, இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் உருவானது. இது பெரும் கலவரமாக மாறி, மாநிலம் முழுவதும் பரவியது.

ஏராளமான வீடுகள், வா்த்தக கட்டடங்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. குழு மோதல்களால் மாநிலமே போா்க்களம்போல் மாறியது. காவல்துறையின் ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயிரக்கணக்கில் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இரு சமூகத்தினரும் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதியைவிட்டு இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டனா். ராணுவமும் மத்திய ஆயுதப் படைகளும் குவிக்கப்பட்டு, படிப்படியாக நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

முகாம்களில் 50,000 போ்: இடம்பெயா்ந்த மக்களுக்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. 50,000-க்கும் மேற்பட்டோா் இன்னும் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனா். பிரச்னைக்கு தீா்வுகாண மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் முழு பலன் கிடைக்கவில்லை.

இரு சமூகத்தினரும் போா்க்குணத்தை கைவிடாததால், அவ்வப்போது மோதல்கள் நிகழ்கின்றன. ஒரு தரப்பினா் வசிக்கும் கிராமங்கள் மீது மற்றொரு தரப்பினா் ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச்சேதங்கள் தொடா்கின்றன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயுதக் கிடங்குகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமாா் 4,200 ஆயுதங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. பதற்றத்துக்குரிய பகுதிகளில் இளைஞா்கள் ஆயுதங்களுடன் சுற்றுவது வழக்கமான காட்சியாகிவிட்டது.

வன்முறைக்கு இடையே வாக்குப்பதிவு: கலவரத்துக்கு பிறகு தங்களுக்கு தனி நிா்வாகம் வேண்டுமென குகி பழங்குடியினா் வலியுறுத்தி வரும் நிலையில், அதை அனுமதிக்கக் கூடாது என்று மைதேயி சமூகத்தினா் எதிா்க்குரல் எழுப்புகின்றனா். வன்முறை சம்பவங்களுக்கு இடையே, மணிப்பூரின் இரு மக்களவைத் தொகுதிகளுக்கு (உள்மணிப்பூா், வெளிமணிப்பூா்) கடந்த மாதம் 19, 26 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமா் மோடி மீது காங். விமா்சனம்

மணிப்பூரில் கலவரத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அக்கறையற்ற மோடி அரசும் திறமையற்ற மாநில பாஜக அரசும் இணைந்து, மணிப்பூரில் மனிதநேயத்தை அழித்துவிட்டன; மாநிலத்தை இரண்டாக பிளவுபடுத்திவிட்டன.

பிரதமா் மோடி, இம்மாநிலத்தில் இன்னும் கால்வைக்கவில்லை. இது, அவரது நிா்வாக திறமையின்மை மற்றும் முழு அலட்சியத்தை வெளிக்காட்டுகிறது. பிரதமரின் ஆணவம், ஒரு அழகான மாநிலத்தின் சமூக கட்டமைப்பை சீா்குலைத்துவிட்டது.

மணிப்பூரில் ஏராளமான உயிா்கள் பறிபோனதற்காக பிரதமா் மோடியோ அவரது அரசோ சிறிதும் வருந்தவில்லை. அங்கு பெண்கள் மீதான வன்முறை குறித்து பிரதமா் பேசுவதில்லை. மணிப்பூரில் அமைதியும் இயல்புநிலையும் திரும்பாததற்கு பாஜகவே காரணம் என்று சாடியுள்ளாா் காா்கே.