மணிப்பூரில் ஓராண்டுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றுக் கொண்டிருக்கிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் முற்றிலும் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடவில்லை என்றாலும், மாநில அரசின் நிர்வாகம் இயல்பாக இருப்பதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுவது அவசியம் என்பதால், குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் குகி மக்கள் பெரும்பான்மையான சுராசந்த்பூர் மாவட்டத்தில் வன்முறை நடைபெற்றிருப்பது வேதனை அளிக்கிறது. புதிய அமைச்சரவையில் குகி சமூகத்தைச் சேர்ந்த 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடம்பெற்றதற்கு சில குகி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். புதிய அரசில் குகி சமூகத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென் துணை முதல்வராகப் பதவியேற்றும்கூட அந்த சமூகத்தினர் திருப்தி அடையாதது எதிர்பாராதது அல்ல. குகி சமூகத்துக்கான அரசியல் தீர்வு குறித்து மத்திய-மாநில அரசுகளிடமிருந்து எழுத்துபூர்வ உத்தரவாதத்தை எதிர்பார்க்கின்றன அந்த அமைப்புகள்.
புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள மைதேயி சமூகத்தைச் சேர்ந்த யும்நாம் கெம்சந்த், சிறந்த அரசியல் அனுபவமும், நிர்வாக அனுபவமும் கொண்டவர். 2017-ஆம் ஆண்டு சிங்ஜாமெய் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார். முதல்வர் பிரேன் சிங்கின் முதலாவது ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவராகவும், 2022-இல் பிரேன் சிங்கின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் கேபினட் அமைச்சராவும் பதவி வகித்தார்.
துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த நெம்சா கிப்ஜென், பாஜக கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த எல். டிகோ ஆகியோர் பதவியேற்றுள்ளனர். இவர்களில் நெம்சா கிப்ஜென் குகி சமூகத்தையும், எல். டிகோ நாகா சமூகத்தையும் சேர்ந்தவர். இவர்களுடன் பாஜகவை சேர்ந்த கோவிந்த் தாஸ் கோன்தௌஜம், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கே லோகேன் சிங் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
மணிப்பூரில் மாநிலத்தின் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினர் இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியிலும், சிறுபான்மை குகி சமூகத்தினர் மலைப் பகுதிகளிலும் வசிக்கின்றனர். குகி சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டதற்கு குகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக குகி சமூகத்தினரும், மைதேயி சமூகத்தினரும் நடத்திய போராட்டங்கள் வன்முறைக்கு வித்திட்டன. இரு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய வன்முறையில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். வன்முறை தொடங்கி சுமார் 20 மாதங்கள் கழித்து 2025, பிப்ரவரி 9-ஆம் தேதி முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அடுத்த சில நாள்களில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பிப்ரவரி 12-ஆம் தேதி நிறைவடைய இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள சூழலில், முதல்வராக மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவரையும், ஒரு துணை முதல்வராக குகி சமூகத்தைச் சேர்ந்தவரையும், மற்றொரு துணை முதல்வராக நாகா சமூகத்தைச் சேர்ந்தவரையும் என புதிய அரசை அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாக அமைத்திருப்பது மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஆரம்பப் புள்ளி என்று கூறலாம்.
60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் சிறுபான்மை குகி சமூகத்தைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் உள்ளனர்; அவர்களில் 7 பேர் ஆளும் பாஜகவை சேர்ந்தவர்கள். பாஜகவுக்கு மொத்தம் 37 எம்எல்ஏக்கள் உள்ளனர்; துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள நெம்சா கிப்ஜென் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்; அந்த சமூகத்திலிருந்து துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ள முதல் பெண் இவர்.
புதிய அரசுக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன. குகி சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் மாநிலத்தைப் பிரித்து தங்களுக்கென தனி நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். குகி சிவில் சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் மக்களுக்கு நீதி கிடைக்காத வரை, அரசியல் தீர்வு கிடைக்காத வரை புதிய அரசில் எந்தப் பங்கையும் வகிக்க மாட்டோம் என்றும், குகி சமூக எம்எல்ஏக்களிடமிருந்து விலகி இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளன.
குகி சமூக மக்களின் தனி நிர்வாகம் என்கிற கருத்துக்கு மைதேயி சமூக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநிலத்தின் எந்த ஒரு பகுதியும் ஒரு குறிப்பிட்ட இனத்துக்குச் சொந்தமானதல்ல என்பது மைதேயி சமூகத்தினர் கருத்து. மேலும், வன்முறையால் வீடுகளை இழந்து மாநிலத்துக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ள அனைவரும் பாதுகாப்பாக உடனடியாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என மைதேயி சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இரு சமூகத்திலும் தீவிரவாத எண்ணம் கொண்ட குழுக்கள் நடத்திவரும் வன்முறை மீண்டும் பெருநெருப்பை பற்றவைத்துவிடக் கூடாது. மைதேயி, குகி சமூக மக்கள் மட்டுமல்ல, வன்முறையால் ஒட்டுமொத்த மாநிலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை மிக கவனமாக கையாள வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.