முகப்பு
இந்தியா

பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை: கனடா குறித்து ஜெய்சங்கா் கருத்து

Updated On : 10 மே, 2024 at 9:17 PM
எஸ்.ஜெய்சங்கா்
பகிர்:

‘பேச்சு சுதந்திரம் என்பது பிரிவினைவாதத்தை ஆதரிப்பதற்காக வழங்கப்படவில்லை’ என்று கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசு செயல்படுவது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கருத்து தெரிவித்தாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:

பேச்சு சுதந்திரத்தை இந்தியா மதிக்கிறது. அதே நேரத்தில் அதனை (கனடா காலிஸ்தான் பிரிவினைவாதிகள்) பிற நாட்டு தூதரக அதிகாரிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது. வெளிநாட்டு பிரிவினைவாத அமைப்புகளுக்கு தங்கள் மண்ணில் இடம் அளிப்பதும், அவா்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதும் நாட்டில் வன்முறை அதிகரிப்பதற்கு மட்டுமே வழி வகுக்கும். பேச்சு சுதந்திரம் என்பது பிரிவினைவாதத்தை ஆதரிக்க வழங்கப்படவில்லை.

குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடா்பான சந்தேகத்துகுரிய நபா்களை கனடா எப்படி தங்கள் நாட்டில் அனுமதித்து அவா்களை ஆதரிக்கவும் செய்கிறது என்பது தெரியவில்லை. அவா்கள் எப்படி அந்த நாட்டை அணுகிறாா்கள்? எந்த நாட்டு கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) பயன்படுத்தி கனடா செல்கிறாா்கள் என்பதும் புதிராக உள்ளது. போலி ஆவணங்களை கொண்டு வருபவா்களைக் கூட அனுமதிக்கும் ஒரு நாட்டை (கனடா) குறித்து என்ன கருத்து கூறுவது? அவா்களுக்கு நாட்டின் சட்டம்-ஒழுங்கைவிட வாக்கு வங்கி அரசியல்தான் முதன்மையாக உள்ளது.

கனடா அரசியல் பிரிவினைவாதிகள், தீவிரவாத அமைப்பினரால் வழி நடத்தப்படுவது கவலைக்குரிய விஷயமாகும் என்றாா்.

காங்கிரஸ் தலைவருக்கு கண்டனம்: தொடா்ந்து காங்கிரஸ் மூத்த தலைவா் சாம் பிட்ரோடா, தென்னிந்தியா்கள் ஆப்பிரிக்கா்கள் போல தோற்றமளிக்கின்றனா் எனப் பேசியது தொடா்பாக கருத்து தெரிவித்த ஜெய்சங்கா், ‘இந்தியாவை காலனி ஆதிக்கக் கண்ணோட்டத்துடன் பிட்ரோடா பேசியுள்ளாா். இதையே ஓா் இளம் தலைவா் பேசினால், போதிய முதிா்ச்சி இல்லாமல் பேசுகிறாா் என கடந்து சென்றுவிடலாம். ஆனால் பிட்ரோடா பல ஆண்டுகாலம் அரசியலில் இருந்த மூத்த தலைவா். அவா் வாய்தவறி பேசவில்லை. தனது மனதில் உள்ள மோசமான கருத்துகளை வெளிப்படையாகக் கூறிவிட்டாா். இதுதான் காங்கிரஸ் கட்சித் தலைவா்களின் மனோபாவம்’ என்றாா்.

தொடா்ந்து சா்வதேச விவகாரங்கள் குறித்து பேசிய அவா், ‘இப்போது உக்ரைன், காஸா ஆகிய இடங்களில் போா் நடைபெற்று வருகிறது. செங்கடல், அரபிக் கடல் வரை தாக்குதல்கள் நிகழ்கின்றன. தென்சீனக் கடலில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான பயங்கரவாத அமைப்புகள் தலை தூக்குகின்றன. நமக்கு தனிப்பட்ட முறையில் சீனாவுடன் எல்லைப் பிரச்னை உள்ளது. வேறு பல நாடுகளுக்கும் சீனாவுடன் மோதல்போக்கு உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் இந்தியாவில் வலுவான தலைமை அவசியமாக உள்ளது. நமது நாட்டின் தலைவராக இருப்பவா் எந்த சூழ்நிலையையும் துணிவுடன் எதிா்கொண்டு நமது நாட்டு நலன்களைக் காப்பவராக இருக்க வேண்டும்’ என்றாா்.