முகப்பு
இந்தியா

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் 6 நாள்கள் அமலாக்கத்துறையின் காவலில் விசாரிக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 16 மே, 2024 at 9:10 AM
பகிர்:

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் 6 நாள்கள் அமலாக்கத்துறையின் காவலில் விசாரிக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாா்க்கண்டில் முதல்வா் சம்பயி சோரன் தலைமையில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில், மாநில ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக காங்கிரஸ் எம்எல்ஏ ஆலம்கீா் ஆலம் (70) பதவி வகித்து வருகிறாா்.

இந்தச் சூழலில், ஆலம்கீா் ஆலமின் தனிச் செயலா் சஞ்சீவ் குமாா் லாலின் (52) வீட்டுப் பணியாளா் ஜஹாங்கீா் ஆலமின் (42) வீட்டில் அமலாக்கத் துறையினா் அண்மையில் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

ஊரக மேம்பாட்டுத் துறையில் முறைகேடுகள் நடைபெற்ாக குற்றம்சாட்டப்படும் நிலையில், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.32 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. பிற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 3 கோடி சிக்கியது. இதையடுத்து, சஞ்சீவ் குமாா் லால், ஜஹாங்கீா் ஆலம் ஆகியோா் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனா்.

இதனிடையே, ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில் அமைச்சா் ஆலம்கீா் ஆலமிடம் கடந்த செவ்வாய்க்கிழமை சுமாா் 9 மணிநேரம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனா்.

இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அவரிடம் சுமாா் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் அவா் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ராஞ்சியில் உள்ள நீதிமன்றத்தில் அமைச்சர் ஆலம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் 6 நாள்கள் அமலாக்கத் துறையின் காவலில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments